வந்தாறுமூலை கண்ணகி வித்தியாலயத்தின் வருடாந்த சிறுவர் விளையாட்டுவிழா


மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா கல்வி வலயத்தில் அமையப்பெற்ற மட்/ ககு/ வந்தாறுமூலைக் கண்ணகி வித்தியாலயத்தின் வருடாந்த சிறுவர் விளையாட்டுவிழா நிகழ்வு 10.03.2018 சனிக்கிழமை பி.ப. 02.00 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.ச.வேதநாயகம் அவர்களின் தலைமையில் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றிருந்தது.
இந் நிகழ்வில் கௌரவ அதிதிகளாக ஏறாவூர்ப்பற்று– 02 கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.பொன்.சிவகுரு அவர்களும், கல்குடா கல்வி வலய ஆரம்பக் கல்விக்கான  உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு கே.ஜெயவதனன் அவர்களும்,  சிறப்பு அதிதிகளாக கல்குடா கல்வி வலய உடற்கல்வி ஆரம்பப் பிரிவுக்கான ஆசிரிய ஆலோசகர் திரு.நா.சதார்த்தனன் அவர்களும் NCM Lanka நிறுவன உத்தியோகஸ்த்தர் திரு.எஸ்.சுரேஸ் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

அத்துடன் ஏறாவூர்ப்பற்று– 02 கல்விக்கோட்டத்தின் சகோதர பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், வந்தாறுமூலை- கிராம அபிவிருத்திச் சங்கம்,  ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் சனசமூக நிலையம், சக்திவிளையாட்டுக்கழகம், வந்தாறுமூலை கலாசார மேம்பாட்டுச் சங்கம், பாரதி மக்கள் அபிவிருத்திச் சங்கம், பாடசாலை அபிவிருத்திக்குழு பிரதிநிதிகளும், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றார்களும் கலந்து கொண்டிருந்;தனர்.

இதன்போது அதிதிகளை மலர்மாலை அணிவித்து பாண்டு வாத்தியத்துடன் வரவேற்று மங்கல விளக்கேற்றி, இறைவணக்கம் இடம்பெற்றது. பின்னர் தேசியக் கொடி பாடசாலைக் கொடி மற்றும் இல்லக் கொடிகள் ஏற்றப்பட்டு தேசியகீதம் தமிழில் இசைக்கப்பட்டு மாணவர்களின் சத்தியப் பிரமாணத்துடன் சிறுவர் விளையாட்டுக்கள் ஆரம்பமாகியிருந்தது.
'செயற்பட்டுமகிழ்வோம்' எனும் தொனிப் பொருளில் மாணவர்கள் அனைவருக்கும் பரிசில்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருந்ததுடன் உடற்பயிற்சிக் கண்காட்சியும் இடம்பெற்றிருந்தது. மேலும் இவ் விளையாட்டு நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக பழைய மாணவர்கள், பெற்றார்கள், ஆசிரியர்கள், நடுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

அத்துடன் இல்லங்களுக்கு இடையிலான இறுதிப் புள்ளிமதிப்பீட்டின் போது விவேகானந்தாஇல்லம் 252 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும், விபுலானந்தா இல்லம் 256 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும் பெற்றிருந்தன. இல்லங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றிக்கேடயங்களும், சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப் பட்டிருந்தனர்.