.கிழக்கில் கல்வியின் வளர்ச்சி தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது

( -க.விஜயரெத்தினம்) 
கிழக்கு மாகாணத்தின் கல்விநிலை அதிகரிக்கப்பட வேண்டும்.கிழக்கில் கல்வியின் வளர்ச்சி தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது.இது ஒட்டுமொத்த பாடசாலை சமூகத்திற்கும்,பெற்றோர்களுக்கும் பாரிய பிரச்சனையாகும்.கிழக்கு மாகாணத்தின் கல்வித்தரப்படுத்தலில் ஒன்பதாவது(9)இடத்தை எட்டியிருப்பது கவலையளிக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்றம் உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட கல்லடி விநாயகர் வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப்போட்டியிலே பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.இந்நிகழ்வு செவ்வாய்க்கிழமை(20.3.2018) பிற்பகல் 3.00 மணியளவில் அதிபர் இ.தியாகலிங்கம் தலைமையில் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் பிரதம அதிதியாகவும்,கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் ஆரம்பக்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் இ.பாஸ்கரன்,
வலயக்கல்வி அலுவலத்தின் உடலியக்கச் செயற்பாட்டு வளவாளர் கு.சிவராசா,ஆசிரிய ஆலோசகர் திருமதி.சு.பூபாலசிங்கம்,மற்றும் ஆலையத்தலைவர்கள்,பெற்றோர்கள்,மாணவர்கள் கலந்துகொண்டார்கள். இந்த விளையாட்டுப்போட்டியில் மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் இடம்பெற்று மாணவர்களுக்கு பரிசுப்பொதிகளும் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.

அவர் தொடந்து பேசுகையில் :-கிழக்கின் கல்விநிலை வீழ்ச்சி கண்டுள்ளது.இந்த கல்விநிலை இன்னும் தொடருமானால் எங்கள் கல்விச்சமூகத்தின் இருப்பு கேள்விக்குறியாகும்.கல்வியின் வீழ்ச்சிபற்றி ஒவ்வொருவரும் ஆய்வுசெய்து கல்வியின் வீழ்ச்சிக்கான காரணங்களை கண்டறிந்து,அதற்கான தீர்வுகளை முன்வைத்து கிழக்கின் கல்வித்தரப்படுத்தலை உயர்த்தவேண்டும்.இதற்கு யாரையும் குறைகூறமுடியாது.பாடசாலைச்சமூகத்திற்கும்,பெற்றோர்களுக்குமான சீரான உறவை கட்டியெழுப்பி மாணவர்களின் குறைபாடுகள்,பெற்றொர்களின் குறைபாடுகள் என்னயென்பது பற்றி ஆராயப்படவேண்டும்.நவீன தொழிநுட்ப யுகத்தில் மூழ்கிக்கொண்டிருக்கும் நாம் கல்வித்தேவைகள் பற்றியோ,மாணவர்களின் உடல்,உளவிருத்தி செயற்பாடுகள் பற்றியோ சிந்திப்பதில்லை.பிள்ளைகள் விரும்பிக்கேட்கும் கையடக்க தொலைபேசியை வாங்கிக்கொடுத்து தனது பிள்ளையின் கல்வியை பெற்றோர்களே சீரழிக்கின்றார்கள்.இதனால் மாணவர்களின் அடைவுமட்டம் வீழ்ச்சியடைகின்றது.தமது பிள்ளையின் கற்றல்செயற்பாடுகளில் ஒவ்வொரு பெற்றோர்களும் ஆரோக்கியமாக கவனம் செலுத்தப்படவேண்டும்.எங்கள் கல்விச்சமூகம் கல்வியின் நிலைபற்றி அறிந்திருக்க வேண்டும்.இன்று கிழக்கு மாகாணத்தின் கல்வித்தரப்படுத்தல் ஒன்பதாபது இடத்தில் இருப்பது ஒட்டுமொத்த பாடசாலைச்சமூகத்திற்கும்,பெற்றோர்களுக்கும்,நலன்விரும்பிகளுக்கும் பாரிய பிரச்சனையாகும்.

கடந்த 2016,2017ஆண்டுகளில் கிழக்கின் கல்விவளர்ச்சி வீழ்ச்சியடைந்துள்ளது.இதற்கு மிகப்பெரிய காரணம் நாட்டில்நிலவிய யுத்தமும் ஆகும்.யுத்தத்தின் வலிகளிலிருந்து தமிழ்சமூகம் படிப்படியாக மீண்டுவரவேண்டும்.மீண்டுவரும் போதுதான் தமிழர்களின் கல்விவளர்ச்சியை உயர்த்திடலாம்.கடந்த காலத்தில் நாட்டில் நிலவிய  யுத்தம் தமிழ்சமூகத்தை பாரியதொரு வீழ்ச்சிக்குட்படுத்தியுள்ளது.கல்வி,பொருளாதாரம்,விவசாயம் போன்றவற்றில் தமிழர்களை பாரியச்சரிவுக்குட்படுத்தியுள்ளது.இப்பாடசாலை பௌதீகவளப்பற்றாக்குறையுடன் இயங்கினாலும் மாணவர்களின் தொகை அதிகரிக்கப்பட வேண்டும்.கிழக்கு மாகாணத்தில் இந்தவருடம் தரம் ஒன்றுக்குச் சேர்த்த மாணவர்களில் 3000 மாணவர்கள் வீழ்ச்சிகண்டுள்ளது.கட்டுமுறிவு,மாங்குளம்,மாவட்டத்தின் எல்லைப்புற பாடசாலைகளில் மாணவர்களின் வரவு வீழ்ச்சியடைந்துள்ளது.யானைத்தொல்லை,கல்விச்சமூகத்தின் ஒத்துழைப்புயின்மை,ஆசிரியமனப்பாங்கின்மை,போக்குவரத்து வசதியின்மை என்பன கிழக்கின் கல்வியின் வீழ்ச்சிக்கு பாரியதொரு சவாலாகயுள்ளது.மூதூர்,மட்டக்களப்பு மேற்கு,கல்குடா வலயங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது.இதனை கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்து தீர்கப்படவேண்டும்.ஆசிரியர்களின் ஒருமித்த செயற்பாடு காரணமாகத்தான் கிழக்குமாகாணத்தின் கல்வியின் வீழ்ச்சிக்குரிய பிரச்சனைக்கு தீர்வுகாணலாம்.

ஜேர்மனி நாட்டின் கல்விக்கொள்கை மாணவர்களின் கல்விவளர்ச்சிக்கு சிறப்பாகவுள்ளது.அங்கு ஆசிரியர்களின் ஊக்கப்படுத்தல் ஊட்டப்படுகின்றது.ஆசிரியர்கள் புனிதமிக்கவர்களாகவும்,குற்றங்களை களைபவர்களாகவும் இருக்கவேண்டும்.நம்நாட்டில் எத்தனை மணிக்கு வீட்டே திரும்பலாம் என நினைக்கும் ஆசிரியர்களும் காணப்படுகின்றார்கள்.ஆசிரியர்கள் மனம்நிறைந்து படிப்பித்து மாணவர்களை நல்ல முன்னேற்றத்திற்கு கொண்டுவர முடியும்.கற்பித்த ஆசிரியர்களை மாணவர்கள் நினைவில் வைத்திருக்க முடியும்.நானும் எனக்கு கல்விபுகட்டிய ஆசிரியர்களை இப்போதும் நினைவில் வைத்திருக்கின்றேன்.மாணவர்கள் ஆசிரியர்களை நினைவு கூறுவது சமூகத்தில் குறைவடைந்துள்ளது.பறங்கிமடு பிரதேசமக்கள் தற்போது கல்வியில் விழிப்படைந்துள்ளார்கள்.பெற்றோர்கள்,அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஒற்றுமையுடன் பாடசாலையை முன்னேற்றுவதில் தீவிரமான கவனத்தை செலுத்துகின்றார்கள்.இந்த பெற்றோர்களின் மாற்றம் கிழக்குமாகாணத்தில் இருக்கும் பெற்றோருக்கும் வரவேண்டுமென தெரிவித்தார்.