மட்டக்களப்பு – செங்கலடி பிரதேசத்தில் இந்த ஆண்டில் 200 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர் என சுகாதார வைத்திய அதிகாரி இ.சிறிநாத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – செங்கலடி பொதுச் சுகாதார பிரிவின் ஏற்பாட்டில் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு தெளிவூட்டும் கருத்தரங்கு நேற்று (16) இடம்பெற்றபோது அங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், “மாவட்டத்தில் இரண்டாது சனத்தொகையினை உள்ளடக்கிய செங்கலடி பிரதேசத்தில் இதுவரை 200 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். எனவே இங்கு சுகாதாரத்துறையை வலுப்படுத்த வேண்டிய தேவை அதிகம் உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்குவின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இம்மாவட்டத்தில் 3 இறப்புகள் பதிவாகியுள்ளன. டெங்கு நோய் காரணமாக நாட்டில் 8 பேர் மரணமடைந்துள்ளனர்.
கடந்த காலங்களில் கொள்கலன்களில் நீர் தொங்கி நிற்பது பெரும் பிரச்சினையாக காணப்பட்டது அவற்றை பெருமளவில் அகற்றியுள்ளோம். தற்போது டெங்கு பரவக்கூடிய இடங்களாக நீர் தாங்கிகள் கிணறுகள் என்பன அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
பிரதேசத்திலுள்ள அடையாளப்படுத்தப்படாத காணிகள் தொடர்பாக பிரதேச சபை ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சில பகுதிகளில் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் உதவியுடன் சுகாதார மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும்” எனத் தெரிவித்தார்.













