தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு மதுவரித் திணைக்களத்தினால் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது என மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி ரி.தயாளேஸ்பரகுமார் தெரிவித்துள்ளார்.
மதுவரித் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் பணிப்புரைக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகள் தொடர்பாக நேற்று (26) கருத்துக் கூறுகையிலேயே இவ்விடயங்களைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், “களுவாஞ்சிகுடி, மகிழுர் மற்றும் எருவில் ஆகிய பகுதிகளில் சட்ட விரோத மது, கள் மற்றும் கசிப்பு ஆகிய விற்பனை நிலையங்கள் இவ்விசேட நடவடிக்கையின்போது முற்றுகையிடப்பட்டுள்ளன.
இந்நடவடிக்கையில் பெருமளவான சட்ட விரோத மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த சித்தரைப் புத்தாண்டு காலப்பகுதியிலிருந்து இது போன்ற விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இதுவரையில் 188 வழக்குகள் நீதிமன்றில் மதுவரித் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டு, 6,26,500 ரூபா தண்டப் பணம் அறவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி ரி.தயாளேஸ்பரகுமார் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள உதவி பொறுப்பதிகாரி பி.செல்வராஜா உட்பட மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர்கள் இவ்விசேட சோதனையில் ஈடுபட்டனர்.













