ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் ஆட்சியதிகாரங்களை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கைப்பற்றியுள்ளது; முடிவில் பதற்றம்!


-செங்கலடி நிருபர் சுபா-
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் ஆட்சியதிகாரங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கைப்பற்றியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பிரதேசத்தில் முதன்முறையாக பிரதேசசபையொன்றினை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கைப்பற்றியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் 31 உறுப்பினர்களில் இருந்து தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவுசெய்யும் முதலாவது அமர்வு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் வை.எம்.சி.சலீம் தலைமையில் நடைபெற்றது.

இதனடிப்படையில் தவிசாளர் தெரிவில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாகமணி கதிரவேல் அவர்களும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் ந.திருநாவுக்கரசு அவர்களும் தவிசாளர் தெரிவிக்கான போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டனர்.


இதன்போது உறுப்பினர்களின் தெரிவுகளுக்கு ஏற்பட்ட திறந்த வாக்கெடுப்பு விடப்பட்டது.இந்த வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாகமணி கதிரவேல் 18வாக்குகளைப்பெற்று தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார்.

பிரதிதவிசாளரக்கான போட்டியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினை சேர்ந்த வி.ஜெயகணேசும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் கா.இராமச்சந்திரன் அவர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் எம்.எஸ்.முகமட் ஜௌப்ரும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இதன்போது இராமச்சந்திரன் 13 வாக்குகளும் ஜெயகணேஸ் 12வாக்குகளும் எம்.எஸ்.முகமட் ஜௌப்ர் 04 வாக்குகளும் பெற்ற நிலையில் இருவர் நடுநிலை வகித்தனர்.

இதனடிப்படையில் இராமச்சந்திரன் அதிகளவான வாக்குகளைப்பெற்றபோதிலும் எதிர்த்தரப்பில் இருந்தவர்கள் இருவரும் அதிகளவான வாக்குகள் பெற்றதன் காரணமாக இராமச்சந்திரன் மற்றும் ஜெயகணேஸுக்கு இடையில் மீள்வாக்கு பதிவுசெய்யப்பட்டது.

இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் கா.இராமச்சந்திரன் 18வாக்குகளையும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினை சேர்ந்த வி.ஜெயகணேஸ் 11வாக்குகளையும் பெற்ற நிலையில் பிரதி தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் கா.இராமச்சந்திரன் தெரிவுசெய்யப்பட்டார்.

இதேவேளை சபை முடிவடைந்ததன் பின்னர் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் வெளியேறிச்சென்றபோது சபைக்கு வெளியில் நின்ற கட்சி ஆதரவாளர்களின் செயற்பாடுகள் காரணமாக அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.

ஸ்ரீலங்கா கட்சி ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட பிளவும் முஸ்லிம் உறுப்பினர்களுடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களித்தமைக்கு எதிராகவும் கட்சி ஆதரவாளர்களிடையே வாக்குவாத்கள் ஏற்பட்டதனால் அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டது.

இதன்போது அங்கு  வந்த ஏறாவூர் பொலிஸார் நிலமையினை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தனர்.