
(பா.மோகனதாஸ்)
கிழக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் மட்டக்களப்பு பிராந்தியத்தில் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளராக பணியாற்றி இன்றுடன்(08) தனது 25 வருட அரச சேவையில் இருந்து எந்திரி முருகேசப்பிள்ளை வடிவேல் ஓய்வு பெற உள்ளார்.
மட்டக்களப்பு கோட்டைக்கல்லாற்றில் 1957 இல் பிறந்த மு.வடிவேல் தனது ஆரம்பக் கல்வியை கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்திலும் இடைநிலைக்கல்வியே வந்தாறுமூலை மகாவித்தியாலயத்திலும் உயர்தர கல்வியே பட்டிருப்பு மகாவித்தியாலயத்திலும் கற்று பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் துறைக்குத் தெரிவாகி பொறியியல் விஷேட பட்டம் பெற்று 1993 ஆம் ஆண்டு யூலை மாதம் 15 ஆம் திகதி வடகிழக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தில் நீர்ப்பாசனப் பொறியியலாளராக இணைந்தார்.
இவர் திருகோணமலை பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் காரியாலயத்திலும் செங்கலடி நீர்ப்பாசனப் பொறியியலாளர் காரியாலயத்திலும் கடமையாற்றி 2002 ஆம் ஆண்டு தம்பிலுவில் நீர்ப்பாசனப் பொறியியலாளர் காரியாலயத்திலும் 2008 ஆம் வருடம் மட்டக்களப்பு பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் பணிமனையில் பிரதம பொறியியலாளராகவும் 2010 ஆம் ஆண்டு பதவியுயர்த்தப்பட்டு திருகோணமலை பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளராக கடமையாற்றி 2012 ஆம் ஆண்டு தொடக்கம் மட்டக்களப்பு பிரதிநீர்ப்பாசனப் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார்.
கிழக்கு மாகாணம் எங்கும் தனது சேவையினை பரந்து வழங்கி ஏழை விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றியவர்.குறிப்பாக மியான்கல் குளம், ஆனைசுட்டகட்டு குளம் என்பன விவசாய நடவடிக்கைக்கு நீண்ட காலமாக பயன்படுத்தபடாமல் காணப்பட்டு இவருடைய காலத்தில் புனருனத்தானம் செய்யப்பட்டு இப்போது விவசாய நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெறுகின்றன, அத்துடன் 2009 இல் இடம்பற்ற புளுக்குனாவே குளம் பாரிய நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டத்திலும் பங்களிப்பாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இறுதியாக தான் ஓய்வு பெறும் இறுதி நாட்களில் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்த குளமானது கெளரவ ஜனாதிபதி மற்றும் கிழக்குமாகாண ஆளுனரின் பனிப்பின் கீழ் மிகச்சிறப்பாக இவரினால் புனரமைப்பு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.














