யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் சிங்கள மாணவர்கள் புத்தர்சிலை வைக்க முற்பட்டதையடுத்து அவ்வளாகம் இன்று (23) முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.
சிங்கள மாணவர்கள் வளாகத்தினுள் புத்தர் விகாரையொன்றினை அமைப்பதற்கான பொருட்களை கொண்டுவந்துள்ளனர். இதன் காரணமாக மாணவர்கள் மத்தியில் முரண்பாடுகள் தோற்றம் பெறலாம் என்பதால் வளாக நிர்வாகம் அதனை தடுத்தது.
இதனையடுத்து குறித்த மாணவர்கள் நிர்வாகத்தினருடன் முரண்பட்டனர். இந்நிலையில் விடுதிகளில் உள்ள மாணவர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பூங்கா வீதியில் உள்ள வவுனியா வளாக நிர்வாக கட்டடத்தொகுதியை சிங்கள மாணவர்கள் சூழ்ந்திருந்ததுடன் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
குறித்த இடத்தில் நான்கு மதங்களுக்குமான வழிபாட்டுத்தலம் அமைப்பதற்கான திட்டம் உள்ளபோதிலும், தற்போது அவ்வளாகம் அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதனால் இதுவரை எந்த மதத்தலங்களும் அமைக்கப்படவில்லை.













