ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா


ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இவ்வாண்டுக்கான பாரம்பரிய கலாசார விளையாட்டு நிகழ்வுகளுடனான சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவானது அக்கரைப்பற்று, தருமசங்கரி விளையாட்டு மைதானத்தில் இன்று (27) மாலை பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸன் தலைமையில் மிகப் பிரமாண்டமான முறையில் இடம்பெற்று முடிந்தது.

அக்கரைப்பற்று, ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய கல்லூரியின் பாண்ட் வாத்தியக் குழுவின் வரவேற்போடு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பிரதம அதிதியாகவும், ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளர் கே.பேரின்பராஜா சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் தேசியக்கொடி, மாகாணக்கொடி மற்றும் பிரதேச செயலகக் கொடிகளையேற்றி, தேசிய கீதமிசைத்து ஆரம்பித்துவைக்கப்பட்ட மைதானப் போட்டி நிகழ்வுகள்  பாரம்பரிய முறைப்படி மங்கல விளக்கேற்றல் மற்றும் இறைவணக்கத்தோடு தமிழர் பெருமக்களின் பாரம்பரியத்தினைப் பறைசாற்றும் வழுக்கு மரமேறல், தலையணைச் சமர், கயிறிழுத்தல், கண்கட்டி முட்டியுடைத்தல், கிடுகிழைத்தல், தேங்காய் துருவுதல், முட்டை மாற்றுதல், தொப்பி எறிதல் ஆகிய போட்டி நிகழ்வுகள் வளர்ந்தோருக்கும், யானைக்குக் கண் வைத்தல், சாக்கோட்டம், சமநிலை ஓட்டம், வினோத உடை, பலூன் ஊதியுடைத்தல், எலி ஓட்டம், மிட்டாய் பொறுக்குதல் போன்ற போட்டி நிகழ்வுகள் சிறுவர்களுக்கும் நடாத்தப்பட்டதுடன் ஒவ்வொரு போட்டி நிகழ்ச்சிகளையும் அதிதிகள் பார்வையிட்டு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தனர்.

இதன்போது ஆலையடிவேம்பு பிரதேசத்தின் பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கும் நோக்கோடு அர்ப்பணிப்போடு சேவையாற்றி வருவதுடன், ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் பொருளாதார அபிவிருத்தியை உயர்த்தும் நோக்கோடு அரும்பணியாற்றிவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் பிரதிநிதியுமான கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸன் ஆகியோர் ஆலையடிவேம்பு வர்த்தகர் சங்கத்தின் தலைவரால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்விற்கு வருகைதந்து சிறப்பித்த அதிதிகளின் உரைகளைத் தொடர்ந்து பாரம்பரிய கலாசார விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய வீர, வீராங்கனைகளுக்கான பரிசில்களும் அவர்களால் அங்கு தொடர்ச்சியாக வழங்கிவைக்கப்பட்டன.

இதேவேளை குறித்த விளையாட்டு விழாவின் ஆரம்பப் போட்டிகளான மரதன் ஓட்டம், சைக்கிளோட்டம் என்பன இன்று (27) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்றலில் ஆரம்பமாகி இடம்பெற்றிருந்ததுடன், இவற்றோடு இணைந்தவகையில் படகோட்டப் போட்டியானது வெகு சிறப்பான முறையில் பனங்காடு தில்லையாற்றில் இடம்பெற்று முடிந்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.