ஆலையடிவேம்பு பிரதேச
செயலகத்தின் இவ்வருடத்திற்கான சித்திரைப் புதுவருட விளையாட்டுப் போட்டிகளில் மூன்றாவது
போட்டியான படகோட்டப் போட்டி இன்று (27) காலை 9.00 மணிக்கு இடம்பெற்றிருந்தது.
சாகாம வீதியின் பனங்காடு
பாலத்தின் கீழ், தில்லையாற்றில் இடம்பெற்ற இப்போட்டி நிகழ்வையும் ஆலையடிவேம்பு பிரதேச
செயலாளரும், சித்திரைப் புதுவருட விளையாட்டுப் போட்டிக் குழுவின் தலைவருமான
வி.ஜெகதீஸன் முன்னைய மரதன் ஓட்டம், சைக்கிளோட்டப் போட்டிகளைப் போன்றே கொடியசைத்து ஆரம்பித்துவைத்தார்.
சுமார் ஐந்து
வள்ளங்களுடன் பத்து வீரர்கள் பங்குபற்றிய குறித்த படகோட்டப் போட்டியில் சுரேஸ் – விஜி
குழுவினர் முதலாமிடத்தையும், துரைசாமி – புனிதன் குழுவினர் இரண்டாமிடத்தையும், ரூபன்
- சந்திரசேகரன் குழுவினர் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
இப் படகோட்டப் போட்டியில்
வெற்றிபெற்ற வீரர்களுக்கான பரிசுகளும் பங்குபற்றிய வீரர்களுக்கான ஆறுதல்
பரிசுகளும் இன்று மாலை அக்கரைப்பற்று, தருமசங்கரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் இவ்வருடத்திற்கான சித்திரைப் புதுவருட விளையாட்டுப்
போட்டிகளின் முடிவில் இடம்பெறவுள்ள பரிசளிப்பு வைபவத்தில் அதிதிகளால்
வழங்கிவைக்கப்படவுள்ளன.
இப்போட்டியின்
முடிவில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் பனங்காடு, சமுர்த்தி
வங்கிக்கு முன்னால் போட்டியில்
பங்குபற்றிய வீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் பனங்காடு மாதர் சங்க உறுப்பினர்களால்
தாகசாந்தி நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.






















