இந்த நாட்டுக்கு மீண்டும் ஒரு தலைகுனிவை ஏற்படுத்தத் தயார் என்றால் மஹிந்த எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரலாம்


அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் ஐயாவிற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை ஏற்கனவே இந்த நாட்டில் கலேபரத்தை ஏற்படுத்தி நாட்டுக்குப் பெரிய அபகீர்த்தி, தலைகுனிவை ஏற்படுத்தியது.

அதே போன்ற ஒரு தலைகுனிவை இந்த நாட்டுக்கு ஏற்படுத்தவதற்குத் தயார் என்றால் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரலாம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

இன்று (25) வவுணதீவு நாவற்காடு பிரதேசத்தில் மட்டக்களப்பு மாவட்ட நீரியல் வள உத்தியோகத்தர் க.கேதாகரன் தலைமையில் இடம்பெற்ற முன்னாள் அமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் பிரதேச மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மண்முனை மேற்குப் பிரதேச சபையின் தவிசாளர் செ.சண்முகராசா, பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், மீனவர் சங்க உறுப்பினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

மத்திய அரசு மாகாண அரசுடன் இணைந்துதான் செயற்பட வேண்டும் என்று நான் மாகாண அமைச்சராக இருந்தபோது வாதுவை கூட்டத்தில் முன்மொழிந்தேன். வடக்கு கிழக்கைத் தவிர ஏனைய மாகாணங்களுக்கு அவ்விதமான தீர்மானம் தேவையில்லை. ஏனெனில் அவை கிட்டத்தட்ட அரசாங்கத்துடன் இணைந்த மாகாணங்களாக இருக்கின்றன.

ஆனால் எங்களுக்கு மத்தி, மாகாணம் என்கின்ற வேறுபாடு இருக்கின்றது. விவசாயம் என்பது 13வது திருத்தச் சட்டத்திலே மாகாணத்திற்கு என்று ஒதுக்கிய ஒரு விடயம். கால வரையிலே அது மத்திக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அந்த நிலைமை மாற வேண்டும். தற்போது இருக்கின்ற நிலைமையில் மத்திய அரசினுடைய எல்லாச் செயற்பாடுகளும் மாகாண அரசினூடாகச் செய்யப்பட வேண்டும் என்று வாதுவைப் பிரகடணம் என்ற பிரகடணத்தில் பின்வரும் தீர்மானங்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

அந்த அடிப்படையில் பல திட்டங்களை மேற்கொள்ளப்பட்டன. அது போல் மீன்பிடி அமைச்சரிடமும் மேற்படி செயற்பாடு தொடர்பில் கதைத்திருந்தேன் அதன் பின் மாகாணசபை கலைந்து விட்டமையால் இவ்வாறான பிரகடணம் போன்று செயற்படுத்த முடியவில்லை.

தற்போது அரசியலமைப்புச் சட்டத்தின் அரைவாசி வேலைப்பாடுகள் நிறைவடைந்திருக்கின்றது. அதனை முழுமை பெறச் செய்ய வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் என்கின்ற ஒன்று வந்துவிட்டால் எமக்கு நிறைந்த அதிகாரங்கள் வரும். அதற்கான செயற்பாடுகள் தற்போது சற்று முடங்கியிருந்தாலும் அவற்றை நிறைவேற்றுவதற்கான செயற்பாடுகளை எமது தலைமை மேற்கொண்டு வருகின்றது.

எமது எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவதாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். தற்போது இருக்கின்ற கூட்டு எதிரணியினருக்கு வெறும் வாய் மெல்லும் ஆச்சிக்கு அவல் கிடைத்தது போன்று சில விடயங்கள் கிடைத்திருக்கின்றது. அதைக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதாகச் சொல்லுகின்றார்கள்.

எந்தவொரு நாட்டிலும் இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டுவந்தது கிடையாது. இந்த நாட்டில் முதன்முதலாக அமிர்தலிங்கம் ஐயா அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது முழுக்க முழுக்க துவேசத்தின் அடிப்படையில் அரசாங்கக் கட்சி கொண்டு வந்தது.

அதன் விளைவுகளாக இந்த நாடே அல்லலுறும் வகையிலான நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த நாடு சின்னாபின்னமாகும் அளிவிற்கு இடம்பெற்ற அநியாயங்கள் எல்லாம் அன்றைய எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்ததற்குப் பிறகு ஏற்பட்ட அனர்த்தங்களே.

இதனை மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாங்கள் எச்சரிக்கையாகக் கூடச் சொல்லுவோம். அன்றைய எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை ஏற்கனவே இந்த நாட்டில் கலேபரத்தை ஏற்படுத்தி நாட்டுக்குப் பெரிய அபகீர்த்தி, தலைகுனிவை ஏற்படுத்தியது.

அதே போன்ற ஒரு தலைகுனிவை இந்த நாட்டுக்கு ஏற்படுத்தவதற்குத் தயார் என்ற சொன்னால் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டு வரலாம். அதனால் அவர் நிச்சயமாகத் தோல்வியடைவார்.

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்தார்கள். இதனால் ஏற்பட்ட விளைவு என்னவென்றால் பிரதமைப் பலப்படுத்தியிருக்கின்றார்கள். எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்தாலும் இதே விடயம் தான் இடம்பெறும்.

எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவளிக்க வேண்டிய கடமை ஜனாதிபதி, பிரதமருக்கு இருக்கின்றது. ஏனெனில் இந்த அரசாங்கத்தை உருவாக்கியதில் மிக முக்கிமான ஒருவர் எதிர்க்கட்சித் தலைவர். எமது தலைவர் இல்லாமல் இருந்திருந்தால் மைத்திரிபால சிறிசேன அவர்களும் வந்திருக்க மாட்டார், இந்த தேசிய அரசாங்கம் உருவாகியிருக்க மாட்டாது.

வழக்கமாக எதிர்க்கட்சி என்பது ஜனநாயக முறையில் அடுத்த முறை ஆட்சியைப் பிடிக்கின்ற கட்சியாகத் தான் இருந்திருக்கின்றன. நாங்கள் அவ்வாறு அடுத்தமுறை ஆட்சியைப் பிடிப்பதற்கான எதிர்க்கட்சியாக அந்தப் பாராளுமன்றத்தில் இல்லை. இந்த நாட்டை முழுக்க முழுக்க துன்பியலிலிருந்து வெளிக்கொணருகின்ற ஒரு செயற்பாடுதான் எமது எதிர்க்கட்சித் தலைவரினால் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த நாட்டில் இப்போது தேவையானது எதிர்க்கட்சி அரசியல் அல்ல, இணக்கப்பாட்டு அரசியல். அந்த இணக்கப்பாட்டு அரசியலின் அடிப்படையில் இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் அரசியலமைப்பின் மூலமான நண்மை கிடைக்கக்கூடியதாக மத்தியில் மட்டும் திரண்டுள்ள அதிகாரத்தை எல்லா மாகாணத்திற்கும் சென்றடையக் கூடிய சமஷ்டி பொருந்திய கூட்டாட்சிதான் இந்த நாட்டுக்குத் தேவையானது என்று எமது தலைமை முயற்சித்துக் கொண்டிருக்கின்றது.

இந்த சமஷ்டி ஆட்சியை முதலில் வலியுறுத்தியது கண்டியைச் சேர்ந்த மக்கள் குழுதான். மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் அவர்களது தலைவராக எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கா அவர்களைக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நாட்டுக்கு சமஷ்டி கட்டமைப்பு தான் சிறந்தது என்றும், இந்த நாடு பல இன, மத, மொழிகைளைக் கொண்ட நாடாக இருப்பதன் காரணமாக பன்முகத் தன்மை கொண்ட இந்த நாட்டிற்கு சமஷ்டி ஆட்சிதான் தேவை என்றும் பண்டாரநாயக்கா அவர்கள் எட்டுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை வரைந்துள்ளார்.

சமஷ்டி ஆட்சியின் தேவையை வலியுறுத்திச் சொன்னவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் பண்டாரநாயக்கா அவர்கள். அந்தத் தத்துவத்தை நிலைநிறுத்துவதற்கான வேலைத்திட்டத்தை தொடக்கி அது சரியான முறையிலே நடந்து முடிய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பவர் தான் தற்போதைய எமது எதிர்க்கட்சித் தலைவர்.

இன்னும் சொல்லப் போனால் பண்டாரநாயக்கா அவர்களின் கனவை நனவாக்கி இந்த நாட்டிலே சமத்துவமாக இந்த நாட்டின் எல்லா மக்களும் வாழக்கூடிய வகையிலான அதிகாரப் பங்கீடு தேவை என்பதைச் செயற்படுத்திக் கொண்டிருப்பவரும், அதற்காக தன்னுடைய மக்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருப்பவருமாக எமது எதிர்க்கட்சித் தலைவர் விளங்குகின்றார்.

பண்டாரநாயக்காவின் சமஷ்டிக் கொள்கையை நிதர்சனமாக்க உழைத்துக் கொண்டிருக்கின்ற அந்தத் தலைவருக்கு எதிரான செயற்பாடுகளை பண்டாரநாயக்காவை தங்களுடைய தலைவர் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணி செய்யும் என்றால் அது பண்டாரநாயக்காவிற்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகம் என்பதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.