செங்கலடி ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்கு சமூகமளிக்காத தவிசாளர்கள்...! உறுப்பினர்கள் விசனம்



மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், ஏறாவூர் நகரசபை மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைகளுக்கு தெரிவாகியுள்ள தவிசாளர்கள் சமூகமளிக்கவில்லை.

குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் ஆகியோரின் இணைத் தலைமையில் நேற்று (9) இடம்பெற்ற போது, தவிசாளர்கள் அதற்கு சமூகமளிக்காது புறக்கணித்துள்ளனர்.

ஏறாவூர் நகரசபைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் ஐக்கிய தேசிய கட்யைச் சேர்ந்த றம்ழான் அப்துல் வாசித் அலியும் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த நாகமணி கதிரவேல் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களின் தவிசாளர் தவிர்ந்த 30 பேரும் ஏறாவூர் நகர சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட தவிசாளர் தவிர்ந்த மூவரும் சமூகமளித்திருந்தனர்.

நேற்று ஏறாவூர் நகரசபைத் தவிசாளர் அப்துல் வாசித் அவர்கள் தமது பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டார் இதன் காரணமாக சமுகமளிக்காமல் விடுவதற்கான வாய்ப்புண்டு, ஆனால் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைத் தவிசாளர்  நாகமணி கதிரவேல்  அவர்கள் சமூகமளிக்காமைக்கு காரணம் தெரியவில்லை.

ஏறாவூர் நகர சபைக்குட்பட்ட ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தில் மூன்று தமிழ் கிராமங்கள் காணப்படுகின்றன நிலையில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு தவிசாளர்கள் சமூகமளிக்காமை தொடர்பாக உறுப்பினர்களினால் விசனம் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்களால் வாக்களிக்கப்பட்டுத் தெரிவான இவர்கள் இவ்வாறான நிகழ்வுகளைப் புறக்கணிப்பது பிரதேச அபிவிருத்திக்கும், பொதுமக்கள் நலனுக்கும் பங்கம் விளைவிப்பதாக அமையக்கூடும்.