பிரதிப்மாஸ்டரின் முன்னுக்கு பின் முரணான சாட்சியத்தால் சந்திரகாந்தனின் வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட, ஆறு பேர் மீதான வழக்கு எதிர்வரும் ஜுன் மாதம் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான ஐந்தாம் கட்ட வழக்கு விசாரணை, இன்று (26) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம். இஸ்ஸதீன் உத்தரவிட்டார்.

குறித்த கொலை வழக்கில் நேற்று சந்தேக நபரான கஜன் மாமா மீதான விசாரணைகள் நடைபெற்ற நிலையில், இன்று முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரதிப் மாஸ்டர் மீதான விசாரணைகள் நடைபெற்றன.

இதன்போது, பிரதிப்மாஸ்டரின் சாட்சியத்தில் முன்னுக்கு பின் முரணான சாட்சியங்கள் தெரிவிக்கப்பட்டதன் காரணமாக, அவர் மீதான இரண்டாம் கட்ட விசாரணையை மேல் நீதிமன்ற நீதிபதி ஒத்திவைத்தார்.

மேலும், மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் தொகுப்பினை இந்த மாத இறுதியில் மன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.
கடந்த 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி, மட்டக்களப்பு மரியால் பேராலயத்தில் நடத்தப்பட்ட கிறிஸ்துமஸ் ஆராதனையின்போது இனந்தெரியாத ஆயுததாரிகளினால் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இது தொடர்பில் 2015ஆம் ஆண்டு முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரதிப்மாஸ்டர் உட்பட ஆறு பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.