நேற்று (12) நாவிதன்வெளி பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் ஆதரவாளர்களுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையில்,
“யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசம் என்பதனால் இங்கு பலர் தங்களது குடும்பங்களை சரியான முறையில் கொண்டு நடத்தமுடியாத நிலைமையிலேயே உள்ளனர். இவர்களுக்கான உதவிகளை செய்து கொடுக்க புலம்பெயர் சமூகம் முன்வர வேண்டும்.
குறிப்பாக குடிநீரை பெறுவதில் மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். இதனால் கல்லோயா நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் வாய்க்கால்களில் வருகின்ற நீர் கிணறுகளில் ஊற்றெடுத்து அந்த நீரையே அன்றாட பாவனைகளுக்கு பயன்படுத்துகின்றார்கள்.
ஆனால் தற்போது வாய்க்கால்களில் வரும் நீரின் அளவும் குறைந்தளவே கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. இதற்கு காரணம் சென்றமுறை பருவமழை சரியான முறையில் கிடைக்காதமையே ஆகும்.
அத்துடன் குறித்த பகுதியில் 10ஆயிரம் ஏக்கர் நெற்செய்கைக்கான காணியில் விவசாயிகள் வேளாண்மை செய்வது வழமை. ஆனால் இம்முறை சிறுபோக வேளாண்மையை மேற்கொள்ளமுடியாத நிலைமை உருவாகியுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சர் உறுதியளித்துள்ளார். இருப்பினும் குறித்த உறுதிமொழி தாமதப்படுத்தப்படுமாயின் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைமை உருவாகும்.
மேலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் சகல வசதிகளையும் கொண்ட வாழ்க்கை முறையினை அமைத்துக்கொள்ள முடியாத நிலையிலேயே இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.
அத்துடன் குறித்த பிரதேசத்தில் வாழும் பெரும்பாலான குடும்பங்கள் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களாகவே காணப்படுகின்றன. அவ்வாறானவர்களுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும் வகையில் எந்தவித ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படாமை பெரும் குறையாகவே இருந்து வருகின்றது.
இதனால் மட்டக்களப்பில் அமைக்கப்பட்டிருக்கும் கைத்தொழில் பேட்டைகளை போன்று நாவிதன்வெளி பிரதேசங்களிலும் அமைக்கப்படுமாக இருந்தால் சிறந்த சமூகத்தை உருவாக்க முடியும். இதற்கு புலம்பெயர் சமூகம் உதவுவதற்கு முன்வர வேண்டுமெனவும் தவராசா மேலும் தெரிவித்துள்ளார்.













