தமிழ் முஸ்லிம் பாகுபாடுகள் இன்றி பிரதேசத்தின் அபிவிருத்திக்காக ஒன்றிணைவோம் - ஏறாவூர் நகர சபை தவிசாளர் அப்துல் வாசித்
(ஏ.எம் றிகாஸ்)
ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் பதவிக்குத் தெரிவுசெய்யப்பட்ட ஐ. அப்துல் வாசித் (9) திங்கட் கிழமை கடமைப் பொறுப்பேற்றார். இதன் உத்தியோகபூர்வ நிகழ்வில் பிரதம அதிதியாகக் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஹாபிஸ் நஸீர் அஹமட், நகர சபையின் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆளுங்கட்சி எதிர்க்கட்சி மற்றும் தமிழ் முஸ்லிம் என்ற பாகுபாடுகள் இன்றி பிரதேசத்தின் அபிவிருத்திக்காக செயற்படுவதற்கு அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் ஒன்றிணையுமாறு ஏறாவூர் நகர சபையின் புதிய தவிசாளர் ஐ.அப்துல் வாசித் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசியக் கட்ச்யில் போட்டியிட்டு வெற்றிபெற்று தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்டு கடமைப்பொறுப்பேற்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு புதிய தவிசாளர் மேலும் பேசுகையில் வஞ்சனைகள் வயிற்றெரிச்சல்களைத் தாண்டி இறைவன் எனக்கு இந்த பதவியைத் தந்துள்ளான். அதற்காக முதலில் இறைவனுக்கு நன்றி செலுத்திக்கொண்டு எனக்கான கடமைகளை தோள் மீது அல்ல தலைமீது பொறுப்பேற்றுக் கொள்கின்றேன்.
நான் கடந்த காலத்தில் அரசியலில் வஞ்சிக்கப்பட்டவன். எனினும் எமது பிரதேசத்தில் கடந்த முப்பது வருடகாலமாக இருந்துவந்த ஏமாற்று, பொய், புரட்டு மற்றும் படங்காட்;டும் அரசியலுக்கு மக்கள் இந்தத் தேர்தல் மூலம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள்.
சத்தியம் வெற்றி பெற்றுள்ளது. அசத்தியம் அழிந்துள்ளது. அந்தவகையில் ஏமாற்று அரசியலை அடியோடு ஒழிப்போம். எமது ஆட்சிக்கு தமிழ்ச் சகோதரர்கள் பாரிய ஒத்துழைப்பினை வழங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் எமது ஏறாவூர் நகர பிரதேசத்திலுள்ள தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் இரு கண்களைப்போன்று நேசிக்வேண்டிய போஷிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் எனக்கு இருப்பதை ஏற்றுக்கொள்கின்றேன்.
எனவே இந்தச் சபையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, தமிழ், முஸ்லிம் என்ற பாகுபாடுகள் இன்றி எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்காக ஒன்றிணைந்து செயற்பட அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.














