
(ரவிப்ரியா)
இன்று வித்தியாசமான சூழலில் மாணவர்கள் இருக்கின்றார்கள். அவர்களை ஒருநிலைப்படுத்தி மூன்று மாதகாலத்துள் அவர்களின் சிந்தனைகளில் ஒரு தெளிவான மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தள்ளதை அவர்கள் வாயிலாகவே கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. அவர்கள் தலைமைத்துவப் பண்புகளுக்கு தயார்படுத்தப்பட்டுள்ளமையை அவர்கள் திறமையை இந்த மேடையில் எம்மால் இனம் காண முடிந்துள்ளது. இது ஒரு நல்ல மாற்றமாகும்.
மேற்கண்டவாறு வை எம் சி ஏ யின் கமம் போக் உயர் பாடசாலையில் மூன்று மாதகால வாழ்வதற்கான சிறப்பு வதிவிட பயிற்சியை பெரியகல்லாற்றில் முடித்துக் கொண்டு வெளியேறும் 8வது அணியைச்சேர்ந்த 18 மாணவர்களக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அதன் அதிபர் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் (28) நடைபெற்றபோது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசிய கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சோந்த கலாநிதி திருமதி நிரஞ்சன் றொட்னி பெனான்டோ தெரிவித்தார்.
அவர் தொடாந்து பேசுகையில்
பட்டப்படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்கள் கூட சமூகத்தோடு எவ்வாறு பழக வேண்டும் என்பதை தெரிந்து கொண்டவர்களாகத் தெரியவில்லை. நாம் தற்போது வித்தியாசமான ஒரு கலாசாரத்தைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றோம்.
இங்கு பயிற்சி பெற்ற மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு இந்தப் பயிற்சி வழிவகுத்துள்ளதாகத் தெரிவித்தார்கள். இது உங்களுக்கான ஒரு ஆரம்பம்தான். இன்னும் பயணிக்க வேண்டிய பாதை மிகவும் நீளமாகவே உள்ளது. நீங்கள் சமுதாயத்தில் எவ்வாறு வரவேண்டும்? பல்கலைக் கழக அனுமதி பெறத்தக்க திறமையான மாணவர்களும் இங்கு இருக்கலாம்.
எப்போதும் உங்கள் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். வாலிப பருவத்தில் மாணவர்கள் நிறைய பிரச்சனைகளை எதிர்கொண்ட வண்ணம் இருக்கின்றார்கள்.
வேலை கொள்வோரொடு அண்மையில் மேற்கொண்ட மீளாய்வு நடவடிக்கையின் போது வேலைக்கு வருபவர்களிடம் சமூக தொடர்பாடல் குறை காணப்படுவது இனம் காணப்பட்டுள்ளது. சமூகத்திற்கு மதிப்பளிப்பதில்லை. கீழ்படிவும் இல்லை. ஒருவித தலைக்கனத்துடன் செயற்படுகின்றார்கள். இவ்வாறுதான் இளம் சமுதாயம் சென்று கொண்டிருக்கின்றது.
ஆனால் இங்கு உங்களுக்களிக்கப்பட்ட பயிற்சியின்போது உங்களின் இக்குறைபாடுகளை நீக்கக்கூடிய பாடவிதானங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமையானது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது.
எனவே நீங்கள் இந்த பயிற்சியின் மூலம் சமூகத்திற்குகந்த பிரஜைகளாக மாறி உங்கள் வாழ்க்கையை உயர்த்திக் கொள்வதுடன் சமூகத்திற்காக சிறந்த சேவைகளை வழங்கவேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
இந் நிகழ்வில் வை எம் சி ஏ யின் பொது செயலாளர் டியோ பாஸ்ரர்களான டேவிட் மற்றும் கிருபைராஜா ஆகியோரும் பாடசாலை உத்தியோகத்தர்களும் நாட்டின் நாலா பக்கமும் இருந்து வருகை தந்த பெற்றோரும் முன்னாள் பயிற்சியாளர்களும் கலந்து கொண்டனர்.




























