
(ஏறாவூர் நிருபர்எஎம் றிகாஸ்)
பெரும் பரபரப்பிற்கு மத்தியில் 05.04.2018 நடைபெற்ற பகிரங்க வாக்கெடுப்பினையடுத்து . நகர சபையின் புதிய தவிசாளராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட எம். அப்துல் பாசித் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் அமைப்பாளர் எம்.எல். றெபுபாசம் பிரதித் தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
கிழக்கு மாகாண உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எம்.வை. சலீம் தலைமையில் ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் இத்தெரிவு நடைபெற்றது.
இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட எம். அப்துல் பாசித்திற்கு ஆதரவாக ஒன்பது வாக்குகளும் முஸ்லிம் சமாதானக் கூட்டமைப்பில் போட்டியிட்ட எம்.எஸ். நழீமிற்கு ஏழு உறுப்பினர்களும் தமது ஆதரவைத் தெரிவித்தனர்.
ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தலின்போது உட்கட்சிப்பூசல் காரணமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஐக்கிய தேசியக் கட்சியையும் அதே கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பையும் எதிரும் புதிருமாக வழிநடாத்தினர்.
இத்தேர்தலில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பிற்கு 5 ஆசனங்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 4 பிரதிநிதிகளுமே கிடைத்தன. ஏறாவூர் நகர சபைக்கு இத்தேர்தலில் 17 உறுப்பினர்கள் தெரிவானதால் 9 உறுப்பினர்களைப் பெறுகின்ற அணிக்கே ஆட்சி அதிகாரம் கிடைக்கும் என்ற அடிப்படையில் முன்னிலை வகித்த இரண்டு அணிகளும் ஏனைய கட்சிகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதில் கடுமையான பிரயத்தனம் மேற்கொண்டன.
எனினும் உறுப்பினர்களினால் கோரப்பட்டதற்கிணங்க நடாத்தப்பட்ட பகிரங்க வாக்கெடுப்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலா இருவரும் மற்றும் சுயேச்சைக்குழு உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனால் நகர சபையின் ஆட்சி அதிகாரம் அக்கட்சி வசமானது.
இந்நிகழ்வின்போது பாராளுமன்ற உறுப்பினர்களான அலி ஸஹிர் மௌலானா, எஸ். சிறிநேசன், எஸ். வியாளேந்திரன் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் ஹஸீர் அஹமட் உள்ளுராட்சி உதவி அணையாளர் கே. சித்திரவேல் மற்றும் நகர சபையின் செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில் உட்பட பலர் பிரசன்னமாயிருந்தனர். பார்வையாளர் அரங்கில் பெரும் எண்ணிக்கையிலானோர் இருந்தமை இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சியில் தவிசாளர் தெரிவானதையடுத்து பார்வையாளர் அரங்கிலிருந்து பலத்த கரகோசம் எழுப்பப்பட்டதுடன் புதிய தவிசாளருக்கு ஆதரவாளர்கள் கூடிநின்று கைலாகு கொடுத்து வாழ்த்துக்கூறினர்.
தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுடன் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மாலை அணிவித்து அழைத்துச் செல்லப்பட்டார்.















