மண்முனை தென் எருவில் பிரதேச செயலகப் பிரிவில், பெயர் சொல்லும் குடியேற்றக் கிராமமாக கண்ணகிபுரம் நிமிந்து நிற்கின்றது. அதற்கு அடிகோலி நிற்கின்றது கிராமத்தில் அமையப்பெற்ற, பட்டிருப்பு கல்வி வலயத்தில் துரித முன்னெற்றத்தைத் தொட்டு நிற்கின்ற சிறந்த பாடசாலையான கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலயம்.

எதையும் முன்மாதிரியாகச் செய்து காட்டுகின்ற அர்ப்பணிப்பும், ஆற்றலும் உள்ள அதிபர், அவருக்கும் சமூகத்திற்கும் விசுவாசமாக அவர் பாணியை பின்பற்றி இயங்குகின்ற கட்டுப்பாடுமிக்க ஆசிரிய குழாம். சமூகத்துடனான இறுக்கமான இடையறா பிணைப்பு. இதுவே கண்ணகிபுரத்தை குடியேற்றக் கிரமங்களின் கலங்கரைவிளக்கமாக காட்டி நிற்கின்றது என்றால் மிகையாகாது.
அந்தவகையில் மற்றுமொரு திருப்புமுனையாக விவசாயக் கண்காட்சியும் அறுவடையும் செவ்வாயன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மண்ணின் மைந்தரும், மண்ணை முழுமையாக நேசிக்கின்றவருமான அரசாங்க அதிபர் மா.உதயகுமார் நீண்ட நேரம் ஒதுக்கி பின்தங்கிய பிரதேச நிகழ்வில் கலந்து கொண்டமையானது அவருக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது. அவரின் அனைத்துப் பிரதேசங்களையும் பாரபட்சமின்றி பராமரிப்பதற்கும் சான்று பகிர்ந்துள்ளது.
அதேபோல் மட் மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன் விசேட அதிதியாகவும், பட்டிருப்பு வலய கல்லி அலுவலக கணக்காளர் திருமதி சு.சிவகுமார், பிரதிகல்விப் பணிப்பாளர் யு.எம்.அஸ்லம் டாக்டர் திருமதி பி.சுதர்சன், பிரதேச உதவி விவசாய ஆணையாளர் செல்வி சிவஞானம் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும், விவசாய போதனாசிரியர் எஸ்.லக்ஸ்மன் கௌரவ அதிதியாகவும், மற்றும் அதிதிகளும் கலந்து கொண்டு நிகழ்விற்கும் குறித்த பிரதேசத்திற்கும் கௌரவம் சேர்த்தனர்.
அதிபர் பிரபாகரன் என்ற சமூக சிற்பியால் செதுக்கப்பட்ட பசுமைச் சோலைதான் இந்த விவசாய கண்காட்சியம், அறுவடையும் என பிரதான அதிதிகளால் இந் நிகழ்வு வர்ணிக்கப்பட்டதும். முன்மாதிரியான சமூகத்திற்கு விழிப்புணர்வு ஊட்டக் கூடிய முக்கிய நிகழ்வு என ஏகமனதாக ஒப்புவித்ததும். இந் நிகழ்வின் பெறுமதியை உணர்த்தியது.
இரசாயன உரமோ கிரமிநாசினியோ பயன்படுத்தாமல், பாடசாலையின் ஒவ்வொரு அங்குல நிலத்தையும் விளைநிலமாக்கி கத்தரிக்காய், சோளன், பச்சை மிளகாய், கீரைவகைகள், அவரை என்பவற்றை அதிதிகள் உற்சாகமாக சம்பிரதாயபூர்வமாக அறுவடை செய்தனர்.
ஐப்பொழுதில்லா பூச்சி, புழு, தாக்கங்கள் அற்ற பளபளக்கும் பொலிவான சுத்தமான கத்தரிகாய்களின் அளவு கண்டு அதிதிகள அதிசயித்துப்; பூரிக்கவே செய்தனர். பிஞ்சு சோளன்களையும் பிரியமுடன் அறுவடை செய்தனர். பச்சை மிளகாயையும் பறித்து பரவசப்பட்டனர். படர்ந்து பசுமை பரப்பிய நிலக்கடலை பருவம் வராததால் அதிதிகள் கை படாமல் தப்பியது. மரவள்ளியும் இணைந்த அதிதிகளின் பலப்பரீட்சையில் சரணடைந்தது.
பார்க்கப் பார்க்க பரவசமூட்டிய பாங்கான பயனுள்ள ஒரு நிகழ்வை பாடசாலையில் பார்த்த நெஞ்சங்களெல்லாம் பாராட்டவே செய்தன. ஆக்கபூர்வமான இந்த பசுமைப்புரட்சியை ஏனைய பாடசாலை அதிபர்களும் தரிசித்து பின்பற்றி பிரதேச பசுமைக்கு பங்களிப்புச் செய்ய வேண்டிய பொறுப்பை ஏற்றுக் கொள்வார்களா?


































