மீண்டும் உயர்கல்வி அமைச்சுடன் பல்கலைக்கழக ஊழியர்களின் பேச்சுவார்த்தை இன்று

உயர்கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆகியன விடுத்துள்ள அறிவுறுத்தல் தொடர்பில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, இன்றைய தினம் இறுதி தீர்மானத்திற்கு வரவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

பல்க்கலைக்கழக கல்வி சாரா பணியாளர்கள் கடந்த 43 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், எதிர்வரும் 17ஆம் திகதியோ, அல்லது அதற்கு முன்னரோ சேவைக்கு திரும்பாதவர்கள், பணியில் இருந்து இடைவிலகியவர்களாக கருதப்படுவார்கள் என்று உயர் கல்வி அமைச்சு நேற்று அறிவித்தது.

எனினும், ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் இணங்கியப்படி, தங்களது வேதன அதிகரிப்பை வழங்கும் வரையில் போராட்டம் கைவிடப்படாது என்று பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்களின் ஒன்றியம் அறிவித்துள்ளது.

இன்றைய தினம் இடம்பெறவுள்ள பேச்சு வார்த்தையின் பின்னர் இறுதி தீர்மானம் தொடர்பில் அறிவிக்கப்படும் என்றும் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.