மட்டக்களப்பு மாநகர முதல்வர் தலைமையிலான முதலாவது சபை அமர்வு


மட்டக்களப்பு மாநகரசபையின் 02வதும், மாநகர முதல்வர் தலைமையிலான முதலாவதுமான அமர்வு இன்று(16) மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவான் தலைமையில் இடம்பெற்றது.

இச்சபை அமர்வில் மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர சபை ஆணையாளர் உதவி ஆணையாளர் மாநகர சபைச் செயலாளர் எனப் பலரும் கலந்து கொண்டனர் இறைவணகத்துடன் தொடர்ந்து தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவாக அஞ்சலி செலுத்தப்பட்டு சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இவ் அமர்வில் சபையின் மாதாந்தஅமர்விற்கான திகதிகள் தீர்மானிக்கப்பட்டதுடன், நிலையியற் குழு மற்றும் விசேட குழுக்களுக்கான பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்பட்டனர்.

அந்த அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் இறுதி வியாழக்கிழமைகளில் சபை அமர்வினை நடத்துவதாக சபையினால் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டு, அதற்கான திகதிகளும் நிர்ணயிக்கப்பட்டன.

பின்னர் மாநகர சபைச் சட்டத்தின் பிரகாரமுள்ள 04 நிலையியற் குழுக்களுக்கான பிரதிநிதிகள் தீர்மானிக்க்கப்பட்டதுடன், மாநகர முதல்வரின் அதிகாரத்திற்குட்பட்ட வகையில் முதல்வரால் மேலதிகமாக 04 விசேட குழுக்கள் அமைக்கப்பட்டு அதற்கான பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்பட்டனர்

அதன்படி நிலையியற் குழுக்களான நிதிக் குழுவிற்கு மாநகர முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் உட்பட 05 உறுப்பினர்களும், சுகாதாரம் தொடர்பான குழுவிற்கு 06 உறுப்பினர்களும், வேலைகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பான குழுவிற்கு 06 உறுப்பினர்களும், நூலகம் மற்றும் மக்கள் பயன்பாடு தொடர்பான குழுவிற்கு 06 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்

முதல்வரினால் உருவாக்கப்பட்ட விசேட குழுக்களான காணி மற்றும் மாநகரசபைச் சொத்துக்கள் தொடர்பிலான குழுவிற்கு 06 உறுப்பினர்களும், கலை கலாச்சாரம் தொடர்பான குழுவிற்கு 06 உறுப்பினர்களும், விளையாட்டு மற்றும் சிறுவர்களியாட்டம் தொடர்பான குழுவிற்கு 08 உறுப்பினர்களும், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் அனர்த்த முன்னாயத்தம் தொடர்பான குழுவிற்கு 08 உறுப்பினர்களும் சபையில் தெரிவு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.