புத்தரின் புனித தாதுக்கள் வரலாற்றில் முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்படுகின்றன - மேஜர் ஜெனரல் தர்ஷன
புத்த பகவானின் ஒரு தொகை புனித தாது பொருட்கள் யாழ்ப்பாண மண்ணுக்கு வரலாற்றில் முதல் தடவையாக கொண்டு வரப்பட்டு யாழ்ப்பாண மக்களின் தரிசனத்துக்கு வைக்கப்படுகின்றன என்று இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இவர் நேற்று வெள்ளிக்கிழமை காலை இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தில் நடத்திய விசேட ஊடகவியலாளர்கள் மாநாட்டிலேயே இதை தெரிவித்தார். இவ்வூடகவியலாளர்கள் மாநாட்டில் அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டத்தில் கொண்டாடப்பட உள்ள புனித வெசாக் பண்டிகைக்கான ஏற்பாடுகள் குறித்து கூறியபோது மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி இது தொடர்பாக மேலும் தெரிவித்தவை வருமாறு:-
புத்த பகவானின் புனித தாது பொருட்கள் உயரிய, மேலான வணக்கத்துக்கு உரியவை. இவை எங்கு காணப்படுகின்றனவோ, எங்கு கொண்டு செல்லப்படுகின்றனவோ அங்கெல்லாம் வனப்பும், செழிப்பும் நின்று நிலவும் என்பது உலகம் தழுவிய புத்த சமயிகளின் நம்பிக்கையும், விசுவாசமும் ஆகும்.
கண்டி தலதா மாளிகையில் புத்த பகவானின் புனித தாது பொருட்களில் ஒன்றான புனித பல் வைக்கப்பட்டு உள்ளது. இதனால்தான் தலதா மாளிகை மிகுந்த உயர்ந்த சிறப்பு பெற்று விளங்குகின்றது. அத்துடன் கண்டி மாவட்டமும் வனப்பும், செழிப்பும் நிறைந்ததாக காணப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாண மண் வனப்பும், செழிப்பும் நிறைய பெற்று மிளிர வேண்டும், யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை செழுமையும், செம்மையும் பெற வேண்டும் என்கிற ஒரேயொரு காரணத்துக்காக புத்த பகவானின் ஒரு தொகை புனித தாது பொருட்களை யாழ்ப்பாண மண்ணுக்கு வரலாற்றில் முதல் தடவையாக கொண்டு வந்து
யாழ்ப்பாண மக்களின் தரிசனத்துக்கு வைக்கின்றோம். இவை எதிர்வரும் 29, 30, 01 ஆம் திகதிகளில் வீரசிங்கம் மண்டபத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கும். இவற்றை தரிசித்து யாழ்ப்பாண மக்கள் அனைத்து நன்மைகளையும் பெற்று உய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கின்றோம்.













