இரண்டரை மாத காலப்பகுதிக்குள் 32 ஆயிரம் பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை!


வெளிநாடுகளில் வாழ்ந்த போதிலும் தமது தாய்நாட்டிற்காக உதவிசெய்வது இன்றைய தினம் இரட்டைபிரஜாவுரிமையை பெற்றுக்கொண்ட அனைவரதும் பொறுப்பும் கடமையுமாகும் என்று வடமத்திய மாகாண அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்துள்ளார்.

இதேபோன்று வெளிநாடுகளில் தாம் சம்பாதித்த செல்வத்தை இந்த நாட்டில் முதலீடு செய்து நாட்டின் அபிவிருத்திக்கு உதவுமாறும் தெரிவித்த அமைச்சர் , தாம் அந்த நாடுகளில் பெற்றுக்கொண்ட அனுபவங்களை இலங்கைக்கு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

பத்தரமுல்லை சுகுறுபாயவில் இன்று நடைபெற்ற இரட்டைபிரஜாவுரிமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வின்போது குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் 468 பிரஜைகளுக்கான இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்பட்டது.

கனடா ,பிரிட்டன் ,சுவீடன் ,அமெரிக்கா, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் பிரஜாவுரிமை பெற்றுள்ள இலங்கையை சேர்ந்த தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களே இன்று இந்த இரட்டை பிரஜாவுரிமையை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டுநாயகம் எம் நிகால் ரணசிங்க குறிப்பிடுகையில்,

இந்த இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் நிகழ்வு இன்று 21ஆவது முறையாக நடைபெறுகின்றது. கடந்த இரண்டரை மாத காலப்பகுதியில் 32ஆயிரம் பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவராலும் ஆட்பதிவுத்திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாளஅட்டையை பெற்றுக்கொள்ளமுடியும்.

அவ்வாறு இல்லாத பட்சத்தில் தாம் குடியிருக்கும் நாட்டின் கடவுச்சீட்டுடன் இலங்கை கடவுச்சீட்டையும் பயன்படுத்தமுடியும். இவர்கள் இலங்கைக்கு வரும்பொழுது விசாவை பெற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.