முச்சக்கர வண்டிகளுக்கு கட்டணம் அதிகரிப்பு..! பேருந்து கட்டணம் அதிகரிக்கும் அபாயம்..!


எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், முச்சக்கர வண்டிகளில் முதல் கிலோ மீற்றருக்காக அறவிடப்படும் கட்டணம் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருட்களின் விலை அதிகரிப்பால் தொடர்ந்து சேவையை முன்னெடுத்துச் செல்வதில் ஏற்பட்டுள்ள சிரமம் காரணமாக, இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய முதல் கிலோ மீற்றருக்காக இதுவரை அறவிடப்பட 50 ரூபா என்ற கட்டணம் 60 ரூபாவாக மாற்றமடையும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

ஆனாலும் முதல் ஒரு கிலோமீற்றரை அடுத்த மீற்றர்களுக்கான அறவீட்டுக் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பேரூந்து கட்டணங்களை அதிகரிக்க நேரிட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் வாரத்தில் இருந்து நூற்றுக்கு 10 சதவீதத்தில் தனியார் பேரூந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்திருந்தார்.

அதன்படி , குறைந்த பட்ச பேரூந்து கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என அவர் இதன் போது குறிப்பிட்டார்.

எரிபொருள் விலை உயர்வு மற்றும் வருடாந்த பேரூந்து கட்டண சீர்த்திருத்தம் என்பவற்றை கருத்திற் கொண்டு இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.