மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் ஐந்தாண்டு நிறைவை முன்னிட்டு கடந்த சனியன்று (05.05.2018) மட்டக்களப்பு கச்சேரி மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற விழாவின் போது திருமதி பாக்கியம் இராசையா அவர்கள் ஆற்றிவரும் சமூக சேவையை பாராட்டி 'சமூக ஜோதி' எனும் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவ்விருதினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமார், சிரேஷ்ட சட்டத்தரணியும் பதில் நீதிவானுமாகிய வ.விநோபாஇந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவர் பாவலர் சாந்தி முஹியித்தின் ஆகியோர் வழங்கி வைத்தனர்.
சிறந்த விளையாட்டு வீராங்கனையாகத் திகழ்ந்த இவர் 1971ல் பழுகாமம் மண்டூர் நவகிரி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் இலிகிதராக நியமனம் பெற்று சேவையாற்றியதுடன் கூட்டுறவு பாடசாலைப் பயிற்சியில் விசேட சித்தியையும் பெற்று பின்னர் கணக்காளராக பதவி உயர்வினையும் பெற்றுக் கொண்டார். தனது 60 வயதில் 38 வருட கூட்டுறவுச் சங்கச் சேவையில் இருந்து ஓய்வினைப் பெற்றுக் கொண்டார்;. எனினும் சிக்கனக் கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கத்தின் பொருளாளராக இன்றுவரையில் சேவையாற்றிவருகின்றார்.
1997 ஆம் ஆண்டில் இருந்து பட்டிருப்பில் வசித்துவரும் இவர் பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டு மக்களுக்கு சேவையாற்றிவருகின்றமையால் 2012ஆம் ஆண்டு சமாதான நீதிவான் நியமனத்தைப் பெற்றுக் கொண்டார்.
கடந்த 1996ம் ஆண்டு தொடக்கம் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் காப்புறுதி ஆலோசகராக சேவையாற்றிவரும் இவர் வியாபார முகாமைத்துவ டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுக் கொண்டதுடன் காப்புறுதித் துறையில்; இதுவரையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்று பல வெளிநாட்டுப் பயணங்களையும் மேற்கொண்டுள்ளார்.













