திருகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்க கடற்படையினர் இலங்கைப் படையினருக்கு பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் யு.எஸ்.என்.எஸ். மேர்சி என்றழைக்கப்படும் மருத்துவக் கப்பல் திருகோணமலை துறைமுகத்தில் இதற்காகத் தரித்து நிற்கின்றது.
இக்கப்பலின் மூலம் கடலில் செய்யக்கூடிய மீட்பு உத்திகள் தொடர்பாக இலங்கைப் படையினருக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதற்காக அமெரிக்க கடற்படையின் கடல் தாக்குதல் உலங்கு வானூர்தி அணியைச் சேர்ந்த எம்.எச் – 60 சீஹோக் உலங்குவானூர்திகள் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும், இம்மருத்துவக் கப்பலில் உள்ள கடற்படை மருத்துவர்களால் இலங்கைப்படைகளுக்கான மருத்துவப் பயிற்சிகளையும் வழங்கிவருகின்றனர்.
அத்துடன், பொது இடங்களை துப்புரவு செய்தல், மருத்துவ முகாம்களை நடத்துதல், சமூகப் பணிகளை மேற்கொள்ளல் மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடுதல் போன்ற பணிகளில் அமெரிக்க கடற்படையினர் பயிற்சியளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.













