இலங்கையில் முதலாவது றோபோ வழியிலான சத்திர சிகிச்சை திருகோணமலை துறைமுகத்தில் அமெரிக்க கடற்படைக் கப்பலில் இடம்பெற்றது

(பேரின்பராசா கிருபாகரன் - ஆரையம்பதி.)

திருகோணமலைத் துறைமுகத்தில் தரித்திருந்த அமேரிக்க கடற்படைக் கப்பலான ‘USNS Mercy’ பலவிதமான வைத்திய சேவைகளையும் தாதிய மற்றும் இதர சுகாதார ஊழியர்களுக்கான பயிற்சிப் பாசறைகளையும் நடாத்தியது  .  
இது ஒரு கப்பல் என்பதைவிட உயர் தொழினுட்பத்துடன் கூடிய சகல  வசதிகளையும் கொண்ட ஒரு ‘மிதக்கும் வைத்தியசாலை’ என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

எட்டு சத்திர சிகிச்சை கூடங்கள், அவசர சிகிச்சை பிரிவு, நான்கு அதி தீவிர சிகிச்சை களங்கள் (ICU) ஆயிரம் நோயாளர் கட்டில்களை கொண்ட வாட்டுகள், CT scan MRI scan, Ultrasound scan உள்ளிட்ட கதிரியக்க நிலையம் என முழுமையான வசதிகளைக் கொண்ட  ஒரு  மேலைத்தேய  வைத்தியசாலையாகவே  காணப்பட்டது.

இதில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக நடைபெற்ற சிறப்பம்சம்தான் Robotic surgery- அதாவது றோபோ வழி சத்திர சிகிச்சை. இதில் laparoscopic surgery என்றழைக்கப்படுகின்ற     கமராமூலம் செய்யப்படுகின்ற சிறுதுளை அறுவைச் சிகிச்சை போலவே துளைகள் சில வயிற்றில்  ஏற்படுத்தப்பட்டு அவற்றினூடாக சில சிறு குழாய்கள் செலுத்தப்பட்டு அவற்றில் றோபோவின் கைகள் பொருத்தப்படும். அதன் பின்னர் அறுவை வைத்தியர் நோயாளியினின்று நீங்கி கட்டுப்பாட்டு அறையினின்று செயற்படுத்த றோபோ கட்டுப்பாடுகளின் அடிப்படையில் சத்திர சிகிச்சையை மேற்கொள்ளும். சிக்கலான  தொழிநுட்பம் மற்றும் அதிக விலை காரணமாக இலங்கைக்கு இதுவரை இன்னும் கொண்டு வரப்படவில்லை. 

இதுவே இலங்கையில் நடைபெற்ற முதலாவது றோபோ வழி சத்திர சிகிச்சை என்பது மட்டுமல்லாது உலகிலேயே முதன்முதலாக ஒரு கப்பலிலே மேற்கொள்ளப்பட்ட றோபோ வழி சத்திரசிகிச்சையுமாகும். 

இச்சத்திரசிகிச்சையை மூதூர் தள வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் வ. வரணிதரன் அவர்கள் நடாத்த அமெரிக்க கடற்படை வைத்திய குழாமும் தொழிநுட்ப குழுவினரும் அனுசரணை வழங்கினார்கள்.  
இந்த மிதக்கும் வைத்தியசாலையின் வருகை பற்றி மூதூர் தள வைத்தியசாலை வைத்திய குழாமிற்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி வ. வரணிதரன் அவர்களும் அவருடைய குழுவினரும் அதற்குரிய பொருத்தமான நோயாளிகளை தேர்வு செய்து தயார் செய்ததுடன் அமெரிக்க கப்பல் படை வைத்திய நிபுணர் குழுவினருடன் தகவல்களைப் பரிமாறிக்கொண்டிருந்தனர்.

இதில் தெரிவு செய்யப்பட்ட நோயாளிகளில் வெருகல் பகுதியைச் சேர்ந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணியும் அடங்குவார். அவர் பித்தக் கற்கள்  பித்தப்பையை அடைப்பதினால் அடிக்கடி கிருமித் தொற்றுக்கு உள்ளாகி சிதல் கட்டிய நிலையில் மிகவும் உபாதைக்குள்ளாகி இருந்தார். அவரின் கிருமித் தொற்றுநிலை ஊசி மருந்துகள் மூலம் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அந்நிலையில்தான் இவருக்கு பித்தப்பையை அகற்ற டாக்டர் வரணிதரன் முடிவெடுத்தார். பின்னர் இவ்விடயம் அமெரிக்க குழாமுடன் கலந்துரையாடப்பட்டு றோபோ முறைமூலம் நடாத்த தீர்மானிக்கப்பட்டு நோயாளியிடமிருந்து ஒப்புதலும் பெறப்பட்டது.
இம்மாதம் 3ஆம் திகதி கப்பலிலுள்ள வாட்டிற்கு அழைத்துச்செல்லப்பட்ட நோயாளி மறுநாள் காலை சத்திர சிகிச்சை கூட்டத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு மயக்கபடுத்தப்படவே வரலாற்று நிகழ்வான றோபோவழி சத்திர சிகிச்சை ஆரம்பமானது. நேர்த்தியாகவும் சிக்கல்களற்றாதாகவும் நடைபெற்ற சிகிச்சை ஒன்றரை மணித்தியாலங்களில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு நோயாளி வாட்டிற்கு மாற்றப்பட்டார். மறுநாள் 5ஆம் திகதி நல்ல உடல் நலத்துடன் மூதூர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அமெரிக்க கடற்படையின் ‘பசுபிக் பங்கேற்பு’ திட்டத்திற்கும் டாக்டர் வால்ரன் ராமரா தலைமையிலான அமெரிக்க கடற்படை வைத்திய குழாமிற்கும்  மிகவும் நன்றி தெரிவிப்பதாக கூறிய Dr. வரணிதரன் ‘கப்பலொன்றில் தான் சத்திர சிகிச்சை செய்த முதல் அனுபவமென்றும்  மிகவும் மகிழ்சசியானதும்  மறக்கமுடியாத்துமான ஓர் அரிய சந்தர்ப்பம்’ என்றும் கூறினார்.
இச்செயதியானது பல அமெரிக்க இணையத்தளங்களில் 

பிரசுரிக்கப்பட்டுள்ளதானது அதன் வரலாற்றுச் சிறப்பை வெளிக்காட்டுகிறது. ‘இது இலங்கைக்கு மட்டுமல்லாது அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து பசிபிக் பங்குதார நாடுகளுக்கும் ஒரு வரலாற்று நிகழ்வாகும்’  என்று அமெரிக்க கடற்படை வைத்திய அத்தியட்சகர் லெப், டாக்டர். கைல் கட்போயிஸ் தெரிவித்தார்.

சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி வ. வரணிதரன் மட்டக்களப்பு ஆரையம்பதியைச் சேர்ந்தவரும்  சிவானந்திய பழைய மாணவருமான மேற்படி சத்திர சிகிச்சை நிபுணர் Robotic பயிற்சிகளை பிரித்தானியாவிலும் விசேட Robotic பயிற்சி நெறிகளை  பிரான்சிலும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது