
மட்டக்களப்பில் வரலாற்றுத் தொன்மைகொண்ட - சந்திவெளி புதுப்பிள்ளையார் ஆலயத்தின் 73 ஆவது வருடாந்த மஹோற்சவ பால்குட பவனியில் நூற்றுக்கணக்கான பெண் அடியார்கள் பங்கேற்றனர்.
ஸ்ரீ கண்ணகி அம்பாள் ஆலயத்திலிருந்து ஆரம்பமான பால்குட பவணி மட்டக்களப்பு திருகோணமலை வீதிவழியாக சுமார் 500 மீற்றர் தூரத்தைக்கடந்து புதுப்பிள்ளையார் ஆலயத்தில் நிறைவடைந்தது.
கணபதிப்போடியார்,தம்பாப்பிள்ளை விதானையார், பொன்னையா மற்றும் செல்லத்தம்பி குடும்பத்தினரின் ஒழுங்கமைப்பில் இப்பால்குட பவணி நடைபெற்றது. இதன்போது வட்டா பூசை, வசந்தமண்டப பூசை மற்றும் சுவாமி வீதிஉலா வருதல் ஆகிய கிரியைகளும் நடைபெற்றன.
கடந்த 28 ஆந்திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மஹோற்சவம் 12.6.2018 தேரோட்டம் மற்றும் தீமிதிப்பு ஆகிய கிரியையகள் நடைபெற்ற பின்னர் எதிர்வரும் 13 ஆந்திகதியன்று தீர்த்தோற்சவத்துடன் நிறைவுறுகிறது.
















