தேவாலய வழிபாட்டின்போது துப்பாக்கி சூடு ! ஒருவர் உயிரிழப்பு, ஐவர் கைது !!


யாழ்ப்பாணம் - மல்லாகம் பகுதியில் இரு குழுவினர் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் காவல்துறை தெரிவித்துள்ளது.

மல்லாகம் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் நேற்று வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிகழ்விற்கு இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது, அங்கு வந்த காவல்துறையினர் மோதலை கட்டுப்படுத்த முணைந்த போது, காவல்துறையினரின் துப்பாக்கியை கைப்பற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, காவல்துறையினரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், மோதலுடன் தொடர்புபடாத இளைஞர் ஒருவர் மீதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக அங்கிருக்கும் பொதுமக்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில், மல்லாகம் குளமங்கால் பகுதியை சேர்ந்த 28 வயதான பாக்கியராஜா சுதர்சன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவத்தில் காயமடைந்த மற்றும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.