கல்லடி கடற்கரையில் ஆரம்பமான தேசிய கபடிப் போட்டிகள்!


44 ஆவது தேசிய விளையாட்டு விழாவுக்கான கடற்கரைக் கபடிப் போட்டிகள் இன்று ஆரம்பமாகியுள்ளன.

மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் ஆரம்பமாகியுள்ள இக் கபடிப்போட்டிகள் முதல் சுற்றின் முதலாவது போட்டியில் வடமாகாண ஆண்கள் அணியும் கிழக்குமாகாணப் பெண்கள் அணியும் வெற்றிபெற்றுள்ளன.

முதல் போட்டிகளின் நிறைவில், ஆண்களுக்கான போட்டியில் வட மாகாணம் 46 புள்ளிகளையும் மத்திய மாகாணம் 28 புள்ளிகளையும் பெற்றுள்ளன. அந்தவகையில் 18 புள்ளிகள் வித்தியாசத்தில் வடமாகாண அணி வெற்றிபெற்றுள்ளது.

அதேபோன்று பெண்களுக்கான போட்டியில் கிழக்கு மாகாண அணி 51 புள்ளிகளையும், மத்திய மாகாண அணி 24 புள்ளிகளையும் பெற்று 26 புள்ளிகள் வித்தியாசத்தில் கிழக்கு மாகாண பெண்கள் அணி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

9 மாகாணங்களின் அணிகளும் பங்குபெறும் வகையில் ஞாயிற்றுக்கிழமை வரை 18 போட்டிகள் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளன.

இவ்வருடத்துக்கான 44 ஆவது தேசிய விளையாட்டு விழா எதிர்வரும் ஒக்ரோபர் மாத இறுதியில் இரத்தினபுரியில் நடைபெறவுள்ளது.

இவ்வருட ஆரம்பம் முதல் தேசிய விளையாட்டு விழாவினை முன்னிட்டு பிரதேச, மாவட்ட ரீதியில் போட்டிகள் நடத்தப்பட்டு, மாகாண ரீதியான போட்டிகளின் பின்னர் அப் போட்டிகளில் வெற்றிபெறுபவர்கள் தேசிய ரீதியான போட்டிகளில் பங்குபற்றுவர்.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன், பிரதி மேயர் கே.சத்தியசீலன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த், விளையாட்டுத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.கேரத், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.குகநாதன், 

மாநகர சபை உறுப்பினரும் விளையாட்டு உத்தியோகத்தர்களுமான எஸ்.பூபால்ராஜ், கே.ரூபராஜ், கபடிப் பயிற்றுவிப்பாளர் து.மதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.