மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள பால்மா விலை!
அமெரிக்கா டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதால் பால்மாவின் விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டும் என நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் டொலரின் பெறுமதி அதிகரித்தமை காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் பால்மா உட்பட அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது, 1 கிலோ கிராம் பால்மா விலையை 70 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரப்பட்டுள்ளதாக அந்த அதிகார சபையின் பணிப்பாளர் டீ.ஜீவானந்த குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மாதத்திற்கு முன்னர் உலக சந்தையில் 3 ஆயிரத்து 250 டொலராக காணப்பட்ட ஒரு மெற்றிக் தொன் பால்மாவின் விலை தற்போது 3 ஆயிரத்து 450 டொலராக அதிகரித்துள்ளது.
இதனால் பால்மாவை இறக்குமதி செய்வதிலும், தமது தொழிலை முன்னெடுத்து செல்வதிலும் பல சிக்கல் நிலைகள் தோன்றியுள்ளதால் பால்மா உற்பத்தி நிறுவனங்கள் இந்த கோரிக்கையை நுகர்வோர் அதிகார சபையிடம் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு தொடர்ந்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிக்க அரசாங்கம் முற்பட்டால், கடும் எதிர்ப்பும், போராட்டங்களும் மக்களால் முன்னெடுக்கப்படும் என்பதில் ஐயமில்லை.













