
குருக்கள்மடம் கிராமத்தில் சயிந்தவன் வதை வடமோடிக் கூத்தின் (14ஆம் நாள் போர்) 09.06.2018 அரங்கேற்றம் சனிக்கிழமை மாலை 7.00 மணிக்கு பல கிராங்களையும் சேர்ந்த மக்களின் இணைவில் இடம்பெற்றது.
கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி வ.இன்பமோகன் அவர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெறும் இந் நிகழ்விற்கு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயம் நிர்வாக சபைத் தலைவர் திரு. வீ.மகேஸ்வரன் அவர்கள் தலைமை தாங்கினார்;
இந் நிகழ்விற்கு அதிதிகளாக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி சி.ஜெயசங்கர், கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை தலைவர் திரு.சு.சந்திரகுமார், உதவிப் பிரதேச செயலாளர் (கச்சேரி) திரு.அ. நவீஸ்வரன் என்போர் கலந்து சிறப்பித்தனர்.
இன்று இடம்பெற்ற அரங்கேற்ற விழா நிகழ்வில் குருக்கள்மடம் கிராமத்தில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கு; மூத்த கலைஞர்களான திரு சி.சிவராசா, திரு.ஞா.சிவசரணம், திரு.த.கிருஷ்ணபிள்ளை என்போர் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டமை சிறப்பு நிகழ்வாக இடம்பெற்றது.
மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்ட கூத்தான 'சயிந்தவன் வதை வடிமோடிக் கூத்து' குருக்கள்மடம் கிராமத்தில் கலாநிதி வ.இன்பமோகன் அவர்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது கூத்து முயற்சியாகும். இக்கூத்துச் செயற்பாடு சுமார் நாற்பது ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கௌரவிகக்கப்பட்ட கலைஞர்களைத் தவிர இக்கிராமத்தில் கூத்துடன் தொடர்புடைய அண்ணாவி, பக்கப்பாட்டுக்காரர் என முன்பிருந்தவர்கள் பலரும் இன்று இறந்து விட்டனர். கூத்துடன் தொடர்புடையதொரு பண்பாடு செழிப்பாகப் பேணப்பட்ட கிராமங்களில் ஒன்றாக இது விழங்கிய போதும் இன்று அவை விடுபட்ட நிலையிலேயே காணப்படுகின்றன. இவ்விரு கூத்துச் முயற்சிகளின் பின்னர் அவை படிப்படியாக அம்மக்களிடம் உருவாகி வருகின்றது.
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் கூத்து முற்சிகள் இக்கிராமத்தில் விளங்கிய கூத்துப் பண்பாட்டை செழிப்புடையதாக்கும் எனலாம்.
சித்தாண்டியைச் சேர்ந்த திரு.வே.தம்பிமுத்து அண்ணாவியார் அவர்களினால் இக்கூத்து பயிற்றுவிக்கப்பட்டது. இவர் சிறந்ததொரு கூத்துப் பாரம்பரியத்தின் ஊடாக மேற்கிளம்பிதொரு அண்ணாவியாராவார்.
வடமோடிக் கூத்துக்களைப் பயிற்றுவிப்பதில் சிறந்த பாண்டித்தியம் உடைய இவர் சுமார் 40க்கு மேற்பட்ட வடமோடி, தென்மோடிக் கூத்துக்களைப் பயிற்றுவித்து அரங்கேற்றியுள்ளார்.
உதவி அண்ணாவியாராக மட்டக்களப்பைச் சேர்ந்த திரு.சீ.அலெக்ஸ்சாண்டர் அவர்களும் கொப்பியாசிரியராக மட்டக்களப்பைச் சேர்ந்த திரு.இ.முத்துலிங்கம், கன்னன்குடாவைச் சேர்ந்த வி.கோடீஸ்வரன் அவர்களும் சபையோராக குருக்கள்மடத்தைச் சேர்ந்த திரு.வ.மகாலிங்கம், பருத்திச்சேனையைச் சேர்ந்த திரு.க.புவிக்குமார், கன்னன்குடாவைச் சேர்ந்த திரு.கு.பிரபாகரன் என்போர் செயற்படுகின்றனர்.
இக்கூத்தில் கீழ்குறிப்பிடுவோர் பாத்திரம் ஏற்று ஆடினர். கட்டியங்காரன் செல்வன் ச.சோபிதன், சயிந்தவன் திரு.செ.சுகிலன், தருமர் திரு.க.சஜிதன், வீமன் திரு.யோ.றோகிலன், அருச்சுனன் திரு.த.ரவி, கிருஷ்ணர் : திரு.வே.லோகுசன், சுபத்திரை திரு.ப.சந்திரசிவம், துரோணர் திரு.அ.ரேனுஜன், துரியோதனன் : திரு.யோ.குருஷேத்திரன், சகுனி திரு.கு.அபிநயன், கன்னன் திரு.ர.பிலோஜன், விகர்ணன் திரு.சா.இரவீந்திரராஜா, துச்சடை செல்வன்.ஜெ.பிரவீன்;, திரௌபதை செல்வன்.து.யதுஸ்கரன், தோழி செல்வன்.ப.அபிவர்மன், தோழி செல்வன் ச.சோபிதன்.







































