
(துறையூர் சக்தன் )
துறைநீலாவணை விஞ்ஞான விழிப்புணர்வு மற்றும் அபிவிருத்தி ஒன்றியத்தினால் (SADAT) துறைநீலாவணை மகா வித்தியாலயத்தில் உயர்தர கணித விஞ்ஞான பிரிவு ஆரம்பிக்கப்பட்டு 10வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பட்டிருப்பு கல்வி வலய பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற கணித விஞ்ஞான அறிவுப் போட்டியின் இறுதிப் போட்டி 13-06-2018 காலை 11:00 மணியளவில் துறைநீலாவணை மகா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் சுகிர்தராஜன், மற்றும் விசேட அதிதிகளாக பட்டிருப்பு கல்வி வலய விஞ்ஞான பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் நடேசமூர்த்தி பட்டிருப்பு கல்வி வலய கணித பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் அன்னநவபாரதி மற்றும் பாடசாலையின் அதிபர் ஈஸ்வரன் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் தவேந்திரன் SADAT அமைப்பின் உறுப்பினர்கள் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இறுதி போட்டியானது பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் மற்றும் கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்றது. இப் போட்டியில் கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயம் வெற்றி பெற்று 10,000.00 ரூபா பணப்பரிசை தட்டி சென்றது. இரண்டாம் இடத்தை பெற்றமைக்காக பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் 5,000.00 ரூபாவினை தனதாக்கி கொண்டது.
மேலும் இறுதிப் போட்டியில் முதலாம் இரண்டாம் இடங்களை பெற்ற பாடசாலை மாணவர்கள் பிரதம அதிதியினால் பதக்கம் அணிவித்து சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். அத்துடன் அரையிறுதிப் போட்டி வரை முன்னேறி இறுதி போட்டிக்கு தகுதியிழந்த குறுமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயம் மற்றும் துறைநீலாவணை மகா வித்தியாலய மாணவர்களும் கலந்து கொண்டமைக்காக சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்..
அத்துடன் 20 பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட எழுத்துமூல பரீட்சையில் வகுப்பு ரீதியாக அதி கூடிய புள்ளிகளை பெற்ற ஆறு மாணவர்கள் நினைவுச்சின்னமும் சான்றிதழ்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். அத்துடன் துறைநீலாவணை மகா வித்தியாலயத்தில் 2017ம் ஆண்டு சாதாரண தர பரீட்சையில் 9A சித்தி பெற்ற மிதுஷாலினி மற்றும் 2017ம் ஆண்டு உயர்தர உயிரியல் பிரிவில் 2AB சித்தி பெற்று மருத்துவ பீடத்திற்கு தெரிவுசெய்யப்பட்டவரும் SADAT அமைப்பின் உறுப்பினருமான மோகனப்பிரியா ஆகியோர் பதக்கம் அணிவிக்கப்பட்டு நினைவுப்பரிசும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
இப் போட்டியானது பட்டிருப்பு கல்வி வலய பாடசாலைகளுக்கிடையே உள்ள 20 பாடசாலைகளில் எழுத்துமூல பரீட்சையில் நான்கு பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டு அரையிறுதிப் போட்டி
13.06.2018 காலை 8:00 மணியளவில் நடாத்தப்பட்டு இறுதி போட்டியானது பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் மற்றும் கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இறுதியாக SADAT அமைப்பின் இணைப்பாளர் பொறியியலாளர் ஜயதேவ் அவர்களின் நன்றியுரையுடன் பிற்பகல் 2.00 மணியளவில் நிறைவடைந்தது.




















