மட்டக்களப்பு மாவட்டத்தில் 1008 சிறிய குளங்கள் புனரமைக்கப்படவேண்டியிருக்கிறது. 220 சிறிய குளங்களைத்தான் புனரமைத்திருக்கிறோம். ஏனைய குளங்களைப் புனரமைக்க வேண்டிய தேவையிருக்கிறது. அதே போல குடிநீருக்கான செலவுகளையும் நாங்கள் செய்ய வேண்டியிருக்கிறது என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட வான் மாயவட்டைத் தெற்குக் கண்டத்தில், மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் நடராஜா சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற காலபோக வேளாண்மைச் செய்கை அறுவடை நிகழ்வில் கலந்துகொண்டு, உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு கமநலப் சேவைப் பிரிவில் 14 விவசாயக் கண்டங்களில் மொத்தம் 1400 ஹெக்டயர் வேளாண்மை செய்கை பண்ணப்பட்டது. இதில் மாயவட்டை தெற்குக் கண்டத்தில் 300 ஏக்கர் செய்கை மேற்கொள்ளப்பட்டது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அரசாங்க அதிபர்,
இது ஒரு பாரம்பரியமானதொரு முக்கியமானதொரு நிகழ்வு, அரசாங்கத்தினால் எவ்வளவு நிதியையும் கொண்டுவந்து செயற்படுத்தலாம் அதிலிருந்து பிரயோசனத்தினைப் பெற்றுக் கொள்ள வேண்டியது அந்த அந்தப்பகுதிகளில் இருக்கின்ற விவசாயிகள், மற்றும் பயன்பெறுகிறவர்கள் அதனைச் சரியாகப்பயன்படுத்த வேண்டும். உண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக விவசாயத்திற்கு முன்னுரிமை கெடுத்துவருகிறோம். அதே போல குடிநீருக்கும், கல்விக்கும் அதிக நிதிகளை அரசாங்கத்திடமிருந்து பெற்று அதனைச் செயற்படுத்த முன்வந்து கொண்டுவருகிறோம்.
இவ்வாறு வடிச்சல் நீரிலிருந்து குறிப்பிட்டளவு அறுவடையினைப் பெற்றுக் கொள்ள முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. இருந்தாலும் விவசாயிகளாகிய நீங்கள் வெற்றிகரமாக இதனைச் செயற்படுத்திக் காட்டியிருக்கிறீர்கள். அதற்காகப்பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாவட்டத்தில் 1008 சிறிய குளங்கள் புனரமைக்கப்படவேண்டியிருக்கிறது. 220 சிறிய குளங்களைத்தான் புனரமைத்திருக்கிறோம். ஏனைய குளங்களைப் புனரமைக்க வேண்டிய தேவையிருக்கிறது. அதே போல குடிநீருக்கான செலவுகளையும் நாங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. செங்கலடிப்பிரதேசத்திலிருக்கின்ற மக்களின் குடிநீர்த் தேவைக்காக 700 மில்லியன் ரூபாய்களை இந்திய அரசாங்கத்திடமிருந்து கோரியிருக்கிறோம். அதற்கான முயற்சிகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறோம். அண்மையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாகவும் குளங்களுக்கான முன்மொழிவுகளை கமநல பிரதிப்பணிப்பாளர் ஊடாகச் சமர்ப்பித்திருக்கிறோம்.
இந்தப்பிரதேசத்தில் இவ்வாறான செயற்திட்டங்களை செயற்படுத்துவதில் அவர் ஒரு பொறியியலாளர் என்ற காரணத்தினால் மிகவும் கடுமையாக உழைத்து வருகிறார். அதே போல முன்னாள் விவசாய அமைச்சர் மற்றும் உத்தியோகத்தர்களும் விவசாயத்துடன் மிக நெருக்கமான தொடர்பிருப்பதனால் தேவைகளை உணர்ந்து செயற்படுகின்றனர். எதிர்வருகின்ற வருடங்களில் விவசாயிகளது தேவைகள் கருததி மிகக் கூடுதலான உதவிகள் கிடைக்கும். உங்களுடைய வேண்டுகோள்களை ஏற்றுச் செயற்படுத்தலாம். உங்களது பகுதிகள் மாத்திரமல்ல ஏனைய பகுதிகளிலும் தேவைகள் நிறையவே இருக்கின்றன. அத்தோடு போக்குவரத்து வசதிகள் சம்பந்தமான அடிப்படைக்கட்டுமான வசதிகளை ஏற்படுத்த வேண்டியும் இருக்கின்றது. அதற்காகவும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
நல்லிணக்க மற்றும் மீள்குடியேற்ற அமைச்சுகளின் நிதிகளில் அதிகமானவை வறுமையான பிரதேசம் என்ற வகையில் இந்தப்பிரதேசங்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் மிகக்கூடிய நிதியினை Nதுவைகளுள்ள பிரதேசங்களுக்கே ஒதுக்கியிருக்கிறோம்.












