தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய திருவிழாவும் தீர்த்தோற்சவமும் (படங்கள் - வீடியோ)



மட்டக்களப்பு, மண்முனை தென் மேற்கு பிரதேசத்துக்குட்பட்ட தாந்தாமலை எனும் குறிஞ்சி நிலத்தில் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் அப்பன் முருகன் ஆலய தீர்த்தோற்சவம் 28.07.2018 காலை திருவோண நட்சத்திர சுப முகூர்த்த வேளையில் இடம்பெற்றது.

மக்களால் சின்னக் கதிர்காமம் என்று அழைக்கப்படும் தாந்தாமலை முருகன் ஆலயத்தில் கடந்த 07.07.2018 அன்று திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, மட்டக்களப்பில் உள்ள கிராம மக்களால் கூட்டாகா சேர்ந்தோ அல்லது தனி கிராமமாகவோ பூஜை நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.

27. 07.2018 வெள்ளிக்கிழமையன்று இறுதி நாள் இரவுத் திருவிழாவை முனைக்காடு கிராம மக்கள் வெகு சிறப்பாக நடாத்தியிருந்தனர், இதன்போது சுவாமிக்கு அபிசேகம், பூஜைகள் இடம்பெற்று, கணபதி மற்றும்  பார்வதி சமேதர் ஆலய வீதி வலம் வர நடுவே எம்பிரான் முருகப் பெருமான் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்தார். இதன்போது சுவாமிக்கு தேவார புராணங்கள், அருணகிரி நாதரால் அருளப்பட்ட திருப்புகள் என்பன அடியார்களால் இசைக்கப்பட்டது,

இங்கு குன்றின் மேல் அமைத்துள்ளது விநாயகர் ஆலயமாகும், ஒவ்வொரு திருவிழாவின் போதும் சுவாமி தூக்கும் அடியவர்கள் கிழே அமைத்துள்ள முருகன் ஆலயத்தை வலம் வந்து பின் சுவாமியை தூக்கிச் சென்று குன்றின் மேல் ஏறி அங்குள்ள விநாயகர் ஆலயத்தை அடைந்து அங்கும் பூஜைகள் இடம்பெறுகின்றது, பின்னர் கிழே இறங்கி வந்து வள்ளியம்மன் ஆலயத்தை அடைந்து அங்கு விசேட கிரியைகள் இடம்பெறுவதைக் காணலாம்,

வள்ளியம்மன் சந்நிதியில் முருகனுக்கு பட்டுச்சாத்தி திருப்புகள் சகிதம் தேவார, புராணம் ஓதப்படுகின்றது, இதில் விசேடம் என்னவென்றால் முனைக்காடு மக்களின் இரவு வேளைத் திருவிழாவில் முருகன் ஆலயத்தில் இருந்து பூஜை பெட்டிகள் எழுந்தருளப்பட்டு வள்ளியம்மன் சந்நிதியில் உள்ளே திரை மறைக்கப்பட்டு பூஜை இடம்பெற்ற பின்னர், அங்கே ஆலய முற்றத்தில் மூட்டப்பட்டிருக்கும் தீயில் அடியவர்கள் பக்கதி மயத்துடன் தீ பாயும் காட்சி முருகன் அருளில் மெய்சிலிர்க்க வைக்கிறது,

இவ்வாறு நடந்தேறிய இரவு நேரத் திருவிழாவை அடுத்தி சனிக்கிழமை அதிகாலை பூஜைகள் இடம்பெற்று, தீர்தோற்சவம் நடைபெற்றது, இவ் உற்சவத்தில் பல்லாயிரம் அடியார்கள் புண்ணிய தீர்த்தம் ஆடி தங்களது நேர்த்தியை பூர்த்திசெய்தனர். இந் நிகழ்வைத் தொடர்ந்து தீர்த்தம் ஆடிய முருகப்பெருமான் இளைப்பாறும் வண்ணம் பொன்னூஞ்சல் ஆட்டப்பட்டு, பூஜைகள் நிகழ்த்தப்பட்டு, திருவிழா இனிது நிறைவடைந்தது.