புதிய நியமனங்கள் வழங்கப்படும் முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.இதில் 11 தொழிற்சங்கங்களின் அங்கத்தவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
நேற்றைய தினம் பிரதமருடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்தே இந்த பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதற்கு தீர்மானித்ததாகவும் மேலும் கல்வி அமைச்சின் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் இலங்கை கல்வி நிர்வாக சேவை தொழிற்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நீல் அத்துகோரள குறிப்பிட்டுள்ளார்.
சுகயீன விடுமுறையிலிருக்கும் தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் சிலரும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக இலங்கை கல்வி நிர்வாக சேவை தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகள் இன்று மூடப்படமாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளதுடன் தொழிற்சங்கங்களினதும் ஊடக நிறுவனங்களினதும் தேவைக்கேற்ப பாடசாலைகளை மூட முடியாது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் வலியுறுத்தியுள்ளார்.













