ஜ.நாவின் உத்தரவை மீறி நாடுகடத்தப்பட்ட இலங்கைத் தமிழன் ! கதறியழும் குடும்பம் (வீடியோ)


அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த 30 வயதுடைய இலங்கைத்  தமிழரான திலீபன் ஞானேஸ்வரன் என்ற இளம் தந்தையொருவர் (17.07.2018) அவுஸ்திரேலிய அரசால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருக்கின்றார்.

நாடுகடத்தப்பட்டால் திலீபன் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகலாம் என்பதால் அவரது நாடு கடத்தலை உடனடியாக கைவிடுமாறு ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அவுஸ்திரேலிய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே இந்த நாடு கடத்தல் இடம்பெற்றிருக்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கை அரச படையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு ஆளான நிலையில் நாட்டை விட்டு வெளியேறிய திலீபன் ஞானேஸ்வரன் 2012 ஆம் ஆண்டு யூன் மாதம் அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார்.

இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு அவர் திருமணம் செய்து தற்போது எட்டு மாதக் குழந்தையொன்றும் இருக்கும் நிலையில் அவுஸ்திரேலிய அரசு அவரை நேற்றிரவு திடீரென நாடு கடத்தியுள்ளது.

தான் நாடு கடத்தப்பட்டால் சிறிலங்கா படையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படலாம் என்று கூறி தனது நாடு கடத்தலை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை, அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் உட்பட அனைத்து இடங்களிலும் திலீபன் மேன்முறையீடு செய்திருந்தார்.

இந்த மேன்முறையீட்டிற்கமைய திலீபனின் நாடு கடத்தலை நிறுத்துமாறு அவுஸ்திரேலிய அரசிடம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. எனினும் இந்த கோரிக்கையையும் பொருட்படுத்தாது அவுஸ்திரேலிய அரசு திலீபனை நாடு கடத்தியுள்ளதாக அவுஸ்திரேலிய தமிழ் ஏதிலிகள் கழகத்தின் ஊடகப் பேச்சாளர் அரன் மயில்வாகனம் வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

திலீபனின் மனைவிற்கு ஐந்துவருட வீசா அனுமதியை வழங்கிய நிலையிலேயே அவுஸ்திரேலிய அரசு தீலிபனை நாடு கடத்தியிருக்கின்றது. இதனால் திலீபனின் மனைவியும், அவர்களது நண்பர்களும் திலீபனின் நாடு கடத்தலுக்கு எதிராக போராட்டமொன்றையும் நடத்தினர்.

இதன்போது திலீபனின் மனைவி கண்ணீர் விட்டு கதறிய காட்சிகள் அனைவரையும் கலங்க வைத்திருந்தது.

அவுஸ்திரேலிய அரசின் இந்த நடவடிக்கை தமிழர்களுக்கு எதிராக அந்த அரசு கடைபிடித்துவரும் கடும்போக்குக் கொள்கையின் வெளிப்பாடே என்றும் அவுஸ்திரேலிய தமிழ் ஏதிலிகள் கழகத்தின் ஊடகப் பேச்சாளர் அரன் மயில்வாகனம் குற்றம்சாட்டுகின்றார்.