களுவாஞ்சிக்குடியில் சங்கமித்த மாபெரும் மும்முனை மதுபுகைத்தல் எதிர்ப்பு பேரணி


(ரவிப்ரியா)
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவில் உள்ள சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றம் களுவாஞ்சிக்குடிபிரதேச செயலகத்துடன் இணைந்து கல்லாறு, எருவில், மாங்காடு சமூர்த்தி வங்கிகள் இணைந்து மேற் கொண்ட சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மேற்கொண்ட பேரணிகள் ஓந்தாச்சிமடம் விநாயகர் வித்தியாலயம், எருவில் கண்ணகி வித்தியாலயம். பட்டிருப்பு தேசிய பாடசாலை ஆகியவற்றிலிருந்து சம காலத்தில் ஆரம்பமாகி களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தை பிரதேச செயலாளர் திருமதி சி. வில்வரெத்தினம் தலைமையில் நேற்று செவ்வாயன்று காலை வந்தடைந்து மாணவர்களின் அலையாகச் சங்கமித்தது.

அங்கு இடம்பெற்ற புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக் கழகத்தின் விழிப்புணர்வு வீதி நாடகம் சிறப்பாக நடைபெற்றது. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து நிகழ்விற்குப் பொருத்தமான விழிப்பணர்வு கருத்துக்களை வாழைப்பழத்தில் ஊசி பதிப்பதுபோல் பார்மையாளர்களின் மனதில் பதித்து சிரிக்கவும் சிந்திக்கவும் செய்தார்கள்.
பண்பட்ட கலைக்கழகம் என்பதை பறைசாற்றிய தரமான படைப்பு. பங்கேற்றவர்களின் மிகைப்படுத்தாத யதார்த்தமான நடிப்பு நாடகத்தின் பலம்.

பட்டிருப்பு தேசிய பாடசாலையின் மாணவி பிரபாகரன் விஸாகரியின் மது மற்றும் புகைத்தல் சம்பந்தமான இரத்தினச் சுருக்கமான உரை நிகழ்விற்கு நிறைவைத் தந்தது.

பிரததே செயலாளர் திருமதி சி. வில்வரெத்தினம் தனதுரையில் இந்த பேரணிகள் சமூகத்தில்  மது புகைத்தல் என்பவற்றில் இருந்து விடுவித்தால் அதுவே பெரிய வெற்றியாக அமையும்.

உடல் உறுதியாக இருந்தாலே எதிலும் எவரும் வெற்றிபெற முடியும். அதற்கு ஊறாக அமையும் போதைவஸ்துகள் பாவித்தல் புகைத்தல் என்பனவற்றின் உபயோகங்களைத் தவிர்ப்பதன் மூலம் ஒருகட்டுக்கோப்பான சமூகத்தை உருவாக்க முடியம். இதற்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பு அளிப்பதன் மூலமே அது சாத்தியமாகும்.

இன்று மாணவர்களிடம் மதுப் பழக்கம் இருப்பதாக அறிய முடிகின்றது. இது மிகுந்த கவலை தரும்விடயமாகும். இது எம்முன்னால் உள்ள பாரிய சவாலாகும். குறிப்பாக இந்த சவாலை எதிர்கொள்ள பெற்றோர் மிகுந்த விழிப்புடன் செயற்பட வேண்டும்.

கடந்த ஓர்மாத காலமாக நாமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றோம். இதுசம்பந்தமான ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தல்களையும் பொது நிர்வாக அமைச்சின் பணிப்புக்களையும் செயற்படுத்துவதில் மும்மரமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

சமூகத்தோடு இணைந்து செயற்படுவதன் மூலமே நாம் இலக்குகளை இலகுவாக அடையமுடியும். எமது செயற்பாடுகள் நிகழ்வகள் சமூகத்தைச் சென்றடைவதன் மூலமே எமக்கும் சமூகங்களக்கிடையேயுள்ள தொடர்புகள் இறுக்கமடையும். அந்தவகையில் ஊடகங்களின் பணியைப் பாராட்டுகின்றோம். என்று குறிப்பிட்டார்.

கல்லாறு சமுர்த்தி வங்கி முகாமையாளரால் ஒழுங்கமைக்கப்பட்ட பேரணி ஓந்தாச்சிமடம் விநாயகர் வித்தியாலயத்தில் இருந்த பிரதேச செயலக கணக்காளர் கார்த்திகேசு தலைமையில் பிரதெச செயலகவளாக வாசலை முதலாவதாக வந்தடைந்தது. பிரதேச செயலாளர் திருமதி வில்வரத்தினம் தலைமைதாங்கிய பேரணி உதவி பிரதேச செயலாளர் சத்தியகௌரி சகிதம் மாங்காடு; சமுர்த்தி வங்கிமுகாமையாளர் பிரயதர்சினி அசோக்கமார் எற்பாட்டில் பிரதேச செயலக முன்றலை இரண்டாவதாக வந்தடைந்தது. 

இறுதியாக எருவில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் திருமதி தர்மப்பிரியா எற்பாட்டில்கதிரவன் கலைக்கழக நாடக குழுவினர் சகிதம பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி பாக்கியராஜா மற்றும் நிருவாக உத்தியோகத்தர் தவேந்திரன் தலைமையில்; பிரதேச செயலகத்தை வந்தடைந்தது.

மூன்று பேரணிகளும் சம காலத்தில் புறப்பட்டு 10 நிமிட இடைவெளியில் பிரதேசசெயலக முன்றலில் சங்கமித்தது எற்பாட்டாளர்களின் சிறந்த முகாமைத்தவத்தை காட்டியது.

நேர்த்தியாக ஒழுங்கமைத்து நேர விரயமின்றி ஒரு மணித்தியாலயத்திற்கு நிகழ்வை மட்டுப்படுத்தி நேரமுகாமைத்தவத்தை பேணியதும் சிறப்பம்சமாகும்.

மட்டக்களப்பு மது பாவனையில் முன்னிலை வகிப்பதை விடுவிப்பதற்கு விழிப்பணர்வு ஊர்வலம் மட்டும் பரிகாரமாகாது. மதுப் பாவனையாளாகளுக்கான தனித்தனி தொடர் மூளைச் சலவை, மற்றும் இத்தகைய குடும்பத்தினருக்கான நிவாரணங்களை மீள் பரிசீலனை செய்தல் போன்ற நடவடிக்கைகளும் அதில் தாக்கத்தைச் செலுத்தக் கூடும். 

எனினும் இந்த முயற்சியும் வரவேற்கத்தக்கதே. குறிப்பாக இவ்விடயத்தில் தளம்பல் நிலையில் உள்ள இளம் சமூகத்திற்கான ஒரு சிறு தடுப்பாக அமையும்.; உணர்வ பூர்வமாக உரத்த குரலில் மாணவர்கள் மதுவிற்கு எதிரான கோசம் எழுப்பி வந்தமை நல்ல நம்பிக்கைக்கான ஒரு சமிக்ஜையாக அமைகின்றது.

நூற்றுக்கணக்கான மாணவர்களும், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் சமுர்த்தி அமைப்பின் பிரதேச சபையின் செயலாளர் என பல முக்கியஸ்தர்களும் அதிகாரிகளும் பொலிசாரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் பிரதேச சபை செயலாளர் கே.லெட்சமிகாந்தன். பிரதேச மட்ட சகவாழ்வு அமைப்பின் தலைவ|ர் எஸ். ஜீவரெத்தினம். பொலிஸ் உத்தியோகத்தர்கள். பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.