
(வரதன்)
கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் போரால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் அச் சமூகத்தில் வறுமை நிலையில் வாழ்பவர்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்கான பங்களிப்பை மேற்கொள்ளும் செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்றைய தினம் மட்டக்களப்பு ஈஸ்ற் லகூன் சுற்றுலா விடுதியில் நடைபெற்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் சுவீடன் நாட்டின் வீ. எப்பக்ற் நிறுவனத்தின் ஊடாக இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட பெண்களை கூட்டுறவின் ஊடாக மேம்படுத்தும் வகையில் அமையவுள்ள இச் செயற் திட்டமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் காவியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தாலும், அனுராதபுர மாவட்டத்தில் ரஜரட்ட பிரஜா நிலையத்தினாலும் முன்னெடுக்கப்படவுளளது.
காவியா நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி திருமதி யோகமலர் அஜித்குமாரின் வரவேற்புரையுடன் ஆரம்பமான அங்குரார்ப்பண நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், உதவி மாவட்டச் செயலாளர் ஏ.நவேஸ்வரன், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, வீ. எப்பகற் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் சுபாசி திசாநாயக்க, திட்ட இணைப்பாளர் பிரியந்த ஜயக்கொடி, உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் 2018 தொடக்கம் 2021 வரையான 4 ஆண்டு காலப்பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள இத் திட்டத்தின் ஊடாக 26 கிராமங்களிலுள்ள 2953 பயனாளிகள் பயன்பெறவுள்ளனர். அத்தோடு 12 மீனவ மற்றும் விவசாய கூட்டுறவுச் சங்கங்களும் இந்த இடையீட்டில் ஈடுபடுத்தப்படுவர்.
பால்நிலை சமத்துவத்தினை உறுதிப்படுத்தும் முகமாக அங்கத்தவர்கள் தொழில் உரிமையாளர்களாகவும் தலைவர்களாகவும் மாறுவதற்கு ஏதுவாக சந்தைத் தொடர்புகள், நிதி பெறுதல், விவசாயத் திறமைகளை வளர்த்தல் போன்ற விடயங்களில் இச்செயற்திட்டத்தின் ஊடாக பயிற்சிகள் அளிக்கப்படும்.
வங்கி உத்தியோகத்தர்கள், கூட்டுறவு அமைப்பின் பிரதிநிதிகள், மண்முனை வடக்கு, மண்முனை மேற்கு, கோரளைப் பற்று தெற்கு, ஏறாவூர் பற்று, உள்ளிட்ட பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள், கமநல சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், சுகாதார சேவைகள் திணைக்களம் மற்றும் பிரதேச சபைகளின் உத்தியோகத்தர்களும் இவ் செயற்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டனர்.இங்கு இத்திட்டங்களை சிறப்பாக முன்னெடுத்த அதிகாரிகள் அதிதிகளால் கௌவுரவிக்கப்பட்டனர்.























