ஈழக்கவி ரசிக்குமாரின் முட்களின் மேல் உறங்கிய இரவுகள்




வெல்லாவெளி கலாசார மண்டபத்தில் ஞாயிற்றுக் கிழமையன்று (15) ஈழக்கவி ரசிக்குமாரின் 'முட்களின் மேல் உறங்கிய இரவுகள்' கவி நூல் வெளியீட்டு விழா சுடர் சனசமூக நிலையத்தின் தலைவர் நே.ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது.

விவேகானந்தபுரம் சுடர் சனசமூக நிலையமும், இளஞ்சுடர் விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்திய இவ்விழாவின் பிரதம அதிதியாக போரதீவுப் பற்று தவிசாளர் யோ.ரஜனி கலந்து சிறப்பிக்க, பெருந்திரளான பிரதேச ஆர்வலர்கள், உத்தியோகத்தர்கள், ஊர் மக்களுடன் யாழ்ப்பாணம் தொடக்கம் அக்கரைப்பற்று வரையிலான பல இளங்கவிஞர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

சிவஸ்ரீ மா. அருள்நாயகம் குருக்களின் ஆசியுடன் இடம்பெற்ற இவ் விழாவில் நூல் வெளியீட்டுரையினை ஓய்வுநிலை அதிபர் த.விவேகானந்தம் நிகழ்த்திவைக்க, முதல் பிரதியை மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சைவப்புரவலர், தேசகீர்த்தி வி.றஞ்சிதமூர்த்தி பெற்றுக் கொண்டார்.

நூலாசிரியருக்கான கௌரவிப்பினைத் தொடர்ந்து தேசிய கலைஞர் கவிக்கோ வெல்லவூர்க் கோபால் அவர்களினால் சிறப்புரை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிதிகள் இளங்கவிஞரான தெ.ரசிக்குமாரின் படைப்பாற்றலை சிறப்பித்தும் அவரை ஊக்கப்படுத்தியும் தமது கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

விசேட அதிதிகளாக வருகைதந்திருந்த கிளிநொச்சி கவிஞர்களான யோ.புரட்சி, வன்னியூர் கிறுக்கன், இசைக்கபி விமல்ராஜ் வவுனியா எஸ். விஜய், வல்வெட்டித்துறை கவிஞர் ஆ.முல்லைதிவ்யன், ஒலுவில் எழுத்தாளர் மீ.ஆதிக், மட்டக்களப்பு கவிதாயினி அ.திலகா, பொத்துவில் கவிஞர் அஜ்மல்கான், வவுனியா கவிஞர் கவிக்காவலன், மட்டுநகர் கமல்தாஜ் ஆகிய இளங்கவிஞர்கள்   தமது கவித்துவத்தை வெளிப்படுத்தி ரசிக்குமாரையும், வெல்லாவெளிப் பிரதேசத்தையும் விழித்து புகழ்மாலை சூட்டினர். 'பூபாளம்' ஆசிரியர் அ.குகாந்தன் மற்றும் கூலாவடியான் விநாயகம் ஆகியோர் நூலாசிரியரை வாழ்த்தி வாழ்த்துப்பா பாடினர். இதன்போது வெல்லாவெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் தொன்மை, வரலாறு, அதன் சிறப்புக்களைக் கொண்டமைந்த ஆவணப்படம் ஒன்றும் காண்பிக்கப்பட்டு நிகழ்வு இனிதே நிறைவுற்றது.