மருதமுனையில் அண்மைக்காலமாக போலியான ஆவணங்கள் தயாரித்து அரச நிலங்களை தனியார் சிலர் அபகரித்து வருவதாக குற்றம்சாட்டி மருதமுனை அல்மனார் சமூகம் ஏற்பாடு செய்த அடையாள அமைதிவழி எதிர்ப்பு பேரணி(27) ஜூம்ஆ தொழுகையின் பின்னர் மருதமுனையில் நடைபெற்றது.
மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் ஒன்றுகூடிய பெரும் திரளான மக்கள் இந்த அபகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுலோகங்களை ஏந்தி கோசமிட்டனர்.
இந்தப் பேரணியில் கல்முனை மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப், ஸ்ரீ லங்கா சுதந்திகட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளரும் உறுப்பினருமான இசட்.ஏ.எச்.ரஹ்மான், உறுப்பினர்களான ஏ.ஆர்.அமீர், எம்.எஸ்.உமர் அலி, வை.கே.றஹ்மான் உட்பட ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் என பெரும்திரளான மக்கள் இதில் கலந்து கொண்டனர்.
மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரிக்கு பின்பகுதி நவியான் குளமாகும். இது கமநலசேவை அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள அரச காணியாகும். இந்தக் குளத்தின் வடக்கு தெற்காக உள்ள 300 மீற்றர் நிலப்பரப்பும், கிழக்கு மேற்காக உள்ள 150 மீற்றர் நிலப்பரப்பும் அல்மனார் மத்திய கல்லூரிக்கு விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு மேலதிக நிலத்தை பராமரிக்குமு; பொறுப்பும் கமநலசேவை அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக பாடசாலைக்கு கடிதம்மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்நிலையில் சில தனிப்பட்டவர்களால் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு குறித்த நிலப்பரப்பை அபகரிக்கும் நோக்கில் எல்லைகள் இடப்பட்டு வருவதாக பாடசாலை சமூகம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் மருதமுனையிலுள்ள முக்கோணகுளம், கரைச்சைக்குளம், வட்டிக்குளம், சிறுகுளம் போன்ற நீரேந்துப் பகுதிகளிலும் சுரண்டப்பட்டு வருவதாக இங்கு தெரிவித்தனர்.
ஆரச சொத்துக்களை அபகரிக்க முயல்பவர்களுக்கு எதிர்ப்பினை தெரிவிப்பதுடன் அரச சொத்துக்களை பாதுகாப்பதற்கு உதவிபுரியுமாறு கோரி அதிமேதகு ஜனாதிபதி மற்றும் கல்முனை மாநகர சபை, பிரதேச செயலகம், பொலிஸ் நிலையம், கமநலசேவை அபிவிருத்தி திணைக்களம் ஆகியவற்றின் தலைவர்களுக்கு மகஜறும் கையளிக்கப்பட்டது.















