உன்னிச்சை விவசாயிகளின் பிரச்சினையைக் கண்டறிய ஆய்வுக்குழு

சமீபத்தில் உன்னிச்சைக்குளம் மடை திறந்ததால் ஏற்பட்ட நீரோட்டத்தில் பாதிக்கப்பட்ட உன்னிச்சைக்குளம் நீர்ப்பாசனத் திட்ட விவசாயிகளின் மனக்குமுறல்களை அறிந்து சிபார்சுகளைச் செய்வதற்காக அமைச்சு மட்டத்திலிருந்து சுயாதீன குழுவொன்றை அனுப்ப விவசாய அமைச்சர் இணங்கியுள்ளதாக உன்னிச்சைக்குளம் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் முகாமைத்துவக் குழுத் தலைவர் கே. யோகவேள் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை 15.07.2018 அவர் இது தொடர்பாக விவரம் வெளியிட்டார்.

இந்த விடயம் குறித்து அவர் மேலும் கூறியதாவது, கடந்த மே மாதம் 24ஆம் திகதி உன்னிச்சைக்குளத்தின் வான் கதவுகள் சடுதியாகத் திறக்கப்பட்டதன் காரணமாக உன்னிச்சை நீர்ப்பாசனக் குளத்தினை அண்டிய சுமார் 6000 ஏக்கர் வயல் நிலங்கள் அழிவடைந்திருந்தன.

இதனால் அப்பகுதி விவசாயிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

சடுதியாக உன்னிச்சைக் குளத்தின் மடை திறக்கப்பட்டதனால் அக்குளத்தின் நீரேந்துப் பகுதிக்குக் கீழிருந்த விவசாய நிலங்கள், வயல்வாடிகள், வாடிகளிலிருந்த உடமைகள் எல்லாம் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாலேயே விவசாயிகள் நிர்க்கதிக்கு உள்ளானார்கள்.

எனினும் இது குறித்து நீர்ப்பாசனத்தின் திணைக்களம், மாவட்ட நிருவாக அதிகாரிகள், மற்றும் விவசாயிகள் ஆகியோரிடையே பரஸ்பர புரிதலை ஏற்படுத்தி முரண்பாடுகளைச் சரிசெய்து அக்கபூர்வமான செயற்பாடுகளை முன்கொண்டு செல்ல எடுத்த நடவடிக்கைகளுக்கு சாதமான விளைவுகள் இதுவரை ஏற்படவில்லை.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிமட்ட விவசாயிகளோடு அணுகும் முறைமைகளில் இன்னமும் திருப்தி ஏற்படவில்லை. இந்த இழுபறி நிலைமையைக் கருத்திற் கொண்டு விவசாய அமைச்சரோடு நேரடியாகக் கலந்துரையாடலில் ஈடுபட்டோம்.

அதன் விளைவாக உன்னிச்சைக்குளம் மடை திறந்ததால் ஏற்பட்ட நீரோட்டத்தில் பாதிக்கப்பட்ட உன்னிச்சைக்குளம் நீர்ப்பாசனத் திட்ட விவசாயிகளின் மனக்குமுறல்களை அறிந்து சிபார்சுகளைச் செய்வதற்காகவும் அதிகாரிகள் மற்றும் அடிமட்ட விவசாயிகளிடத்தில் பரஸ்பர ஒத்துழைப்பைப் பேணுவதற்காகவும் அமைச்சு மட்டத்தில் சுயாதீன குழுவொன்றை அனுப்ப விவசாய அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

இந்தக் குழு இந்த வாரத்தில் (16 முதல் 20 வரை ) களத்திற்கு விஜயம் செய்து அடிமட்ட விவசாயிகளோடு கலந்துரையாடி களத்திலுள்ள உண்மை நிலைமைகளை அமைச்சு மட்டத்திற்கு எடுத்துக் கூறவுள்ளது” என்றார்.