போரதீவுபற்றில் மாற்றீட்டு தொழில்நுட்பத்திலான வீடுகள் திறந்து வைப்பு


ஐரோப்பிய ஒன்றிய நிதி உதவியுடன் ஹபிட்டாட் போ ஹியுமானிட்டி, சிறிலங்கா (Habitat for Humanity Sri Lanka) மற்றும் வேல்ட் விஷன் லங்கா நிறுவனங்களினால் நடைபெற்று வரும் 'வீடு அல்ல வாழ்விடம் ' திட்டத்தின் கீழ் மாற்றீட்டு தொழில்நுட்பத்திலான வீடுகள் போரதீவுபற்று நவகிரிநகர் கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் வீடுகளில் முடிவுற்ற ஒரு தொகுதி வீடுகள் 12.07.2018 அன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது.

கட்டுமான மூலப் பொருட்களுக்கான சவாலை எதிர்நோக்குவதனால் அதற்கு பதிலாக சூழல் நேய மாற்றீட்டு தொழில்நுட்பத்திலான அமுக்கி உறுதியாக்கப்பட்ட கற்கள் (CSEB) உள்ளூர் மூலப் பொருட்களையும்; தொழிலாளர்களையும் கொண்டு உற்பத்தியாக்கப்பட்டு அக்கற்களினால் இவ்வீடுகள் அமைக்கப்பட்டிருப்பது ஒரு சிறப்பம்சமாகும்.

இவ்வீடுகள் உறுதியானதாகவும் குளிர்மையானதாகவும் நேர்த்தியான கட்டமைப்பாக அமைந்துள்ளதுடன் பயனாளிகள் மாதிரி வீட்டினை பார்வையுற்று தங்கள் விருப்பத்திற்கேற்ற வடிவங்களில் வீடுகளை அமைத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 580 வீடுகள் தலா 775000.00ரூபா பெறுமதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமைக்கப்பட்டு வருகின்றன.
 
இவ்வீடுகள் கையளிக்கும் வைபவத்திற்கு மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திரு. மா. உதயகுமார், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி ஹய்மி ரோயோ ஒலிட், ஹபிட்டாட் போ ஹியுமானிட்டி திட்ட தலைவர் பிரயன் கிராண்ட், பிரதேச செயலாளர் R. இராகுலநாயகி மற்றும் அரச உத்தியோகத்தர்கள், ஹபிட்டாட் போ ஹியுமானிட்டி, வேல்ட் விஷன் லங்கா உயர் அதிகாரிகள் சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் பங்குபற்றினர்