தந்தை சுட்டுக்கொல்லப்பட்டு ; தாய், சகோதரி காணமல் போன நிலையில் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட தமிழர்


அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் நாடு கடத்தப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகம் ஒன்று தற்போது தகவல் வெளியிட்டுள்ளது.

தந்தை சுட்டுகொல்லப்பட்டதுடன் தாய் மற்றும் சகோதரி காணாமல் போன நிலையில் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய குறித்த இளைஞன் நாடுகடத்தப்பட்டுள்ளார் என அந்த ஊடக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கவி எனப்படும் 25 வயதான புகலிட கோரிக்கையாளரின் பிணைத்தல் விசா காலாவதியான பின்னர், கடந்த 4 மாதங்களாக Yongah Hill தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற கொடூர யுத்தத்தில் பாதிக்கப்பட்ட நிலையில் 2009ஆம் ஆண்டு அவரது சகோதரர் கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார்.

உள்துறை விவகார அமைச்சர் Peter Duttonக்கு, கவி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் திகதி எனது தாயாரிடம் இருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் எனது தாயார் அழுதவாறு பேசினார். தந்தை தோட்டத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என கூறினார். இதுவரையிலும், இலங்கை அதிகாரிகள் தனது தந்தைக்கு மரண சான்றிதழ் வழங்கவில்லை என குறிப்பிட்டார்.

மேலும் நான் இப்போது என் அம்மா மற்றும் சகோதரியினதும் தொடர்பையும் இழந்து விட்டேன். அவர்களிடம் இறுதியாக 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி தொடர்பு கொண்டேன். செஞ்சிலுவை சங்கத்தினரிடம் அவர்களை தேடுமாறு குறிப்பிட்டுள்ளனர். எனினும் எனது சகோதரி மற்றும் தாய் ஆகிய இருவரையும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. செஞ்சிலுவை சங்கமும் தனது தாயாரை கண்டுபிடிக்க தவறியுள்ளது.

கவியின் குடும்ப சூழ்நிலைகளில் ஏற்பட்ட மாற்றங்களை தொடர்ந்து, பாதுகாப்பு விசா விண்ணப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு உள்துறை விவகார அமைச்சர் Peter Dutton இடம் கவி கோரிக்கை விடுத்துள்ளார். எனினும் அவரது கோரிக்கைகள் குறித்து செவிமடுக்காமல் அவர் மே மாதம் 17ஆம் திகதி அவர் நாடு கடத்தப்பட்டுள்ளார் என தற்போது செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.