மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களின் சுற்றாடல் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி


(வரதன்)
ஜனாதிபதியின் பேண்தகு இலங்கை வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் சுற்றாடல் பாதுகாப்பு செயற்திட்ட விழிப்புணர்வு பேரணி மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட யோசப் வாஸ் வித்தியாலய ஊட்டப் பிரதேசத்திலும் நடத்தப்பட்டது. ஜனாதிபதியினால் கல்வி அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் பேண்தகு வேலைத்திட்டத்தின் கீழ் ,உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம், சுற்றாடல் பாதுகாப்பு தேசிய வேலைத்திட்டம், போதைப்பொருள் தடுப்பு தேசிய வேலைத்திட்டம், சிறுவர் பாதுகாப்பு தேசிய வேலைத்திட்டம், சிறுநீரக நோய்த் தடுப்பு தேசிய வேலைத்திட்டம் ஆகியன நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

காலை பாடசாலையின் அதிபர் எம்.ஐ.சுதாகரன் தலைமையில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில் மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக திட்டமிடலுக்குப் பொறுப்பான உதவிக்கல்விப்பணிப்பாளர் வை.சி.சஜீவன், தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் ஏ.ஜெயநாதன், தேசிய சுற்றாடல் அதிகார சபையின் மட்டக்களப்பு அதிகாரி திருமதி ஆர்.பாஸ்கரன், , பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்களும் கலந்து கொண்டனர்.

பாடசாலை முன்றலில் ஆரம்பமான சுற்றாடல் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி திருமலை வீதி ஊடாக, ஞாசூரியம் சதுக்கச் சந்தி ஊடாக மீண்டும் திருமலை வீதி ஊடாக பொலிஸ் நிலையச் சந்தி, தோமஸ் வீதி , லொயிட்ஸ் அவனியூ ஊடாக மீண்டும் பாடசாலையை அடைந்தது. இதன் போது விழிப்புணர்வு ஸ்டிக்கர்களும் பொது இடங்களில் ஓட்டப்பட்டது. இத்திட்டத்தின் ஊடாக பாடசாலை மாணவர்கள் சுயமாக தங்களுடைய வாழ்க்கை முறையை எதிர்காலத்தினை முன்னெடுக்கும் வகையிலான இயலுமையினை ஏற்படுத்துதலாகும். நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் இவ் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு கல்வி வலயத்திலிருந்து முதல் கட்டத்தில் 27 பாடசாலைகளும், 2ஆம் கட்டத்தில் மேலும் 17 பாடசாலைகளும் உள்வாங்கப்பட்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.