மாணவர்கள் இடைவிலகலைத் தவிர்ப்பதற்கு சகலதரப்பும் ஒன்றிணைய வேண்டும் - பிரதேச செயலாளர் திருமதி தெட்சணா கௌரி



(ரவிப்ரியா)                 
ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தி வெறுமனே கட்டடங்கள் அமைப்பதிலோ வீதிகள் போடுவதிலோ மட்டும் தங்கியிருக்கவில்லை. கல்வி அபிவிருத்தி மூலமே சகல துறைகளுக்குமான அபிவிருத்தி சாத்தியமாகும். எனவே நாம் சிறார்களின் கல்வி வளர்ச்சியில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் அதற்கான வாய்ப்புக்களையும் எற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

மேற்கண்டவாறு அம்பிளாந்துறையில் சிறுவர்கள் உரிமை பற்றிய வழி நடத்தல் குழுக் கூட்டத்தினை ஆரம்பித்து வைத்துப் பேசிய மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் திருமதி தெட்சணா கௌரி டினேஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன், கோட்டக்கல்வி அதிகாரி ந.தயாசீலன். சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் கே.எம்.புவிதரன் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் வி.குகராஜ் மற்றும் அதிபர்கள் கிராம உத்தியோகத்தர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் அவர் தொடர்ந்து பேசுகையில்,

பின்தங்கிய பிரதேசங்களில் கல்வி அபிவிருத்தியில் பாடசாலைகளில் இடைவிலகும் மாணவர்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றார்கள்.; இதைக் கட்டுப்படுத்துவதற்காக எமது உத்தியோகத்தர்கள் களத்தில் நேரடியாக இறங்கிச் செயற்பட்டு மீண்டும் இவர்களை பாடசாலையில் மீளச் சேர்ப்பிப்பதில் அயராதுழைத்துவருகின்றனர். மீளப் பாடசாலைகளில் அவர்களைச் சேர்ப்பதோடு மட்டுமன்றி அவர்கள் கல்வியைத் தொடர்வதற்கான சகல வசதிகளையும் செய்து கொடுத்து வருகின்றனர்.

எனவே இந்த முயற்சியில் அவர்கள் மட்டும் தனித்து நின்று வெற்றி பெற்றுவிட முடியாது. அதில் பெற்றோர் தங்கள் பங்களிப்பை முழுமையாகச் செய்யவேண்டும். பொது அமைப்பக்கள். கல்வித்திணைக்களம், ஆலயங்கள் ;என்பன சமூகப் பொறுப்புடன் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.

சிறுவர் மற்றும் மகளிர் அமைச்சு சமகாலத்தில் சிறுவர் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு தொடர்பாக பல பொறிமுறைகளை வகுத்துச் சிறப்பாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

கிராம மட்டம், தொடக்கம் தேசிய மட்டம்வரை சிறவர் உரிமைகள் பற்றிய வழிநடாத்தல் குழுக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இதனால் சிறுவர் உரிமைகள் மீறப்படும் சந்தர்ப்பங்கள் சிறுவர்களுக்கு பாதுகாப்பற்ற சந்தர்ப்பங்கள், மற்றும் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பில் அவ்வவ் மட்டங்களிலேயே தீர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கின்றது.

ஆத்துடன் பாடசாலை மட்டங்களில் அதிபர் தலைமையில் வரவுக் குழுக்களும், கோட்க்கல்வி அதிகாரியின் தலைமையில் பிரதேச கண்காணிப்பு குழுவம் உத்தியோக ரீதியாக அமைத்துச் செயற்படவேண்டும். அத்துடன் தேசிய சிறுவர் அதிகாரசபையும் சிறுவர் பாதுகாப்பு குழுக்களை அமைத்துள்ளது.

எனவே சிறுவர் பாதுகாப்பிற்கான உத்தரவாதம் சட்டரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அவையனைத்தும் நடைமுறைப்படுத்தப்பட சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் சிறவர்களின் எதிர்காலம் சபீட்சம் மிக்கதாக அமையும் எமது பிரதேச செயலகம் அதற்கு முன்மாதிரியாக அமையும் என்று குறிப்பிட்டார்.