மொறட்டுவை பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றம் பெருமையுடன் நடாத்திய சொக்கன் ஞாபகார்த்த மட்டு மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான சொற்கணை விவாதப் போட்டி, மட்டு வின்சன்ட் உயர்தர மகளிர் தேசிய பாடசாலையில் (29) இடம்பெற்றது.
ஏழு பாடசாலைகள் பங்குபற்றிய மாவட்ட மட்டப் போட்டியில் மட்/ வாழைச்சேனை இந்துக்கல்லூரி, குறுமண்வெளி சிவசக்தி மகாவித்தியாலயம், மட்டு புனித மிக்கேல் கல்லூரி, மட்/ வின்சன்ட் உயர்தர தேசிய பாடசாலை ஆகிய நான்கு பாடசாலைகள் அரையிறுதிக்கு தெரிவாகின.
எமது நாட்டின் இன்றைய ஊடகங்கள் சமூக அக்கறையுடன் செயற்படுகின்றதா ? செயற்படவில்லையா எனும் தலைப்பினாலான விவாதச் சமரில் புனித மிக்கேல் கல்லூரியினை தோற்கடித்து ,மட்/ வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலை இறுதிப்போட்டியில் வெற்றி வாகை சூடியது. இவ் இறுதிப்போட்டியில் ஒன்பது பேர் கொண்ட பாரிய நடுவர் குழாம் செயற்பட்டனர்.
போட்டியில் வெற்றியீட்டிய அணி இருபத்தைந்து மாவட்டங்களும் பங்குபெறும் அகில இலங்கை ரீதியிலான விவாதச் சமரில் பங்குபற்றவுள்ளதுடன் இப் போட்டி கொழும்பில் நடைபெறவுள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது.

















