முஸ்லிம்களை புறக்கணித்து வடக்கு கிழக்கு பிரச்சினையைத் தீர்க்க முடியாது – ஹிஸ்புல்லாஹ்


முஸ்லிம்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் புறக்கணித்துவிட்டு வடக்கு கிழக்கு இனப்பிரச்சினைக்கு ஒரு போதும் தீர்வு காணமுடியாது என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். இதனை தமிழ் தலைமைகள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை சம்பவத்தின் 28 ஆவது ஆண்டு நினைவுகூரல் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “தமிழ் – முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதன் ஊடாக வடக்கு கிழக்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். மாறாக முஸ்லிம்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் புறக்கணித்துவிட்டு அம்மக்களின் அடிப்படைப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காணமுடியாது.

இவ்விடயத்தில் தமிழ் தலைமைகள் மிகத்தெளிவாக இருக்க வேண்டும். வடக்கு கிழக்குப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதாக இருந்தால் முஸ்லிம்களை தமிழ் மக்கள் மதிக்க வேண்டும். முஸ்லிம்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும், தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் தமிழ் தலைமைகள் முன்வர வேண்டும்.

ஆனால் தமது அரசியல் சுயலாபங்களுக்காக தமிழ் பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைப்பதாலோ அல்லது ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதாலோ வட. கிழக்குப் பிரச்சினைக்குத் தீர்வைக் காணமுடியாது” என்று தெரிவித்தார்.