
(கதிரவன்)
திருகோணமலை வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் புதிய தலைவராக மீண்டும் கு.குலதீபன் இரண்டாவது தடவையாகவும் தெரிவாகி உள்ளார். ஞாயிற்றுக்கிழமை 2018.08.19 மதியம் 2 மணிக்கு திருகோணமலை குளக்கோட்டம் மண்டபத்தில் சம்மேளத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பலத்த பொலிஸ் பாதுகாப்பு மண்டபத்திற்கு உள்ளேயும், வெளியேயும் போடப்பட்டு இருந்தது. இதில் புதிய நிர்வாக தெரிவும் இடம் பெற்றது. தலைவர் பதவிக்கு கு.குலதீபன், மார்ட்டீன் ஜெயகாந் இருவரும் , சிரேஷ்ட உபதலைவர் பதவிக்கு தயானந்த ஜெயவீர மற்றும் இரா.ரவிச்சந்திரமோகன், பொருளாளர் பதவிக்கு ஏ.எஸ்.நசீர், த.வாமதேவன் ஆகியோர் போட்டியிட்டனர்.
இவர்களைத் தெரிவு செய்வதற்கு ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதலாவது வாக்கு மாலை 4.55 மணிக்கு இடப்பட்டது. மாலை 6.50 மணிக்கு கூட்டம் நிறைவுக்கு வந்தது. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மார்ட்டீன் ஜெயகாந் 24 வாக்குகளையும், கு.குலதீபன் 60 வாக்குகளையும் பெற்றனர். சிரேஷ்ட உபதலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜெயவீர 33 வாக்குகளையும், ரவிச்சந்திரமோகன் 50 வாக்குகளையும் பெற்றனர். பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட நசீர் 35 வாக்குகளையும், த.வாமதேவன் 50 வாக்குகளையும் பெற்று குறித்த பதவிகளுக்கு தெரிவாகினர்.
11 பேர் கொண்ட பணிப்பாளர் சபை தெரிவுக்கு 21 பேர் போட்டியிட்டனர். இதில் க.திருச்செல்வம் 38, கு.பிரகாஷ் 38, கே.செல்வேந்திரன் 33, எஸ்.உதயணன் 33, வி.சச்சிதாந்தன் 32, தி.பிரபாகரன் 31, ஜெ.காந்தரூபன் 30, திருமதி ரோகினி மல்லிகா 29, தி.பத்மராஜா 29, இ.ஹரிதரன் 27, கே.ராஜேஸ்வரன் 26 வாக்குகளையும் பெற்று தெரிவாகினர்.














