ஒவ்வொரு மனிதருடைய பாரம்பரியங்களே மனிதர்களின் வாழ்வியலை விளக்கி நிற்கின்றது. அந்தவகையில் பாரம்பரிய அரங்க ஆற்றுகைகளும் பாரம்பரிய அரங்கப் பொருட்களும் எமது பாரம்பரியங்களை முதன்மைப்படுத்தி நிற்கின்றன. அந்தவகையில் கடந்த ஏழு வருடங்களாக மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறையினரால் பாரம்பரிய அரங்க ஆற்றுகைகளும், ஆற்றுகைக் களரியும,; காட்சிக்கூடமும் ஆலய உற்சவகாலத்தில் நான்கு, ஐந்து நாட்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இது மக்களின் வரவேற்பினைப் பெற்ற ஒரு நிகழ்வாக காணப்படுகின்றது. அதேபோல் இவ்வருடமும் சிறப்பாக இடம்பெறுகின்றது.
கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து இச்செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இது ஒவ்வொரு வருடமும் இடம்பெறுவதற்கு முன்னின்றவர்கள் நுண்கலைத்துறைத் தலைவர்களே ஆகும். இவர்களினுடைய வழிகாட்டலிலே விரிவுரையாளர்கள், மாணவர்கள் இதனை மேற்கொண்டு வருவது பாராட்டத்தக்கதாகும். அந்தவகையில் 2011ல் நுண்கலைத்துறைத் தலைவராக இருந்த கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களின் முயற்சியிலேயே இது ஆரம்பிக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டு வரை கலாநிதி சி.ஜெயசங்கர் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து 2014ம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டு வரை நுண்கலைத்துறைத் தலைவர் கலாநிதி வ.இன்பமோகன் தலைமையில் நடைபெற்று வந்துள்ளன. இவ்வருடம் நுண்கலைத்துறைத் தலைவர் திரு.சு.சந்திரகுமார் தலைமையில் இடம்பெறுகின்றது.

இங்கு இடம்பெறும் நிகழ்வுகள் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நோக்கினைக் கொண்டதாக அமைந்திருந்தன. ஆரம்பத்தில் இது தொடங்கும் போது பாரம்பரிய அரங்கக் கலைகளின் குறிப்பாக வடமோடி, தென்மோடிக் கூத்துக்களின் சமகாலத் தேவைகளையும் இது எதிர் கொள்ளும் சாவால்களையும் உரையாடலுக்கு கொண்டுவரும் நோக்கில் திட்டமிட்டு நிகழ்ச்சி நிறைவேற்றப்பட்டது. அடுத்து பாரம்பரிய அரங்குகள் பண்பாட்டு விழுமியங்களாகவும் உள்ளுர் தொழிற்துறைகளாளகவும் ஒருசேர இயங்குவதை அடையாளம் காட்டுவதையும் இவற்றை வளர்த்தெடுப்பதன் தேவையை விளக்குவதாகவும் அமைகின்றது.

அடுத்து கூத்தின் வாத்தியக் கருவி உருவாக்குபவர்கள், ஒப்பனை செய்பவர்கள், சதங்கை வாடகைக்குவிடுவோர் போன்றோர்களை கூட்டுறவு அமைப்பாக உருவாக்கி செயற்படுத்தலும், செயன்முறையாகவும் சமுதாய மயப்பட்டதாகவும் நடைமுறை வாழ்க்கையை எதிர்கொள்வதற்காகவும் அமையும் கல்வி முறையாக அரங்கவிழா முன்னெடுக்கப்பட்டது. அடுத்து பாரம்பரியக் கலைகள், கலைஞர்கள் சமுகங்கள் பற்றிய நவீன சமுகங்களின் புரிதல்கள், எண்ணங்கள், கண்ணோட்டங்கள், பார்வைகள், சிந்தனை என்பன மீதான புதிய தேடல்களும் மீள்பார்வைகளும் புதிய சிந்தனைகளுக்கும் களமாக அமையும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
பாரம்பரிய அரங்க கலைகள் சமுதாயமயப்பட்ட கலை செயற்பாடுகளாகவும் கல்வி முறைகளாகவும் இயங்கி வருகின்ற பொறிமுறைகளை விளங்கி கொள்வதற்கும் இந்த பொறிமுறைகளில் அவதானிக்கப்படுகின்ற சிக்கல்களை புரிந்து கொண்டு மீளுருவாக்கம் செய்வதற்கான செயல்மைய ஆய்வு களங்களாகவும் இது அமைகின்றது.

மாணவர்கள் மிகுந்த பொறுப்புடன் தமது திறன்களை வெளிப்படுத்தும் வகையிலும் அரங்கச்செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். நுண்கலைத்துறை மாணவர்களால் களரி வேலைப்பாடும் தோரணவேலைப்பாடும,; காட்சிக்கூட வேலைப்பாடும் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் அவர்களினுடை ஆற்றுகைகளும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தன.
எமது இளைய தலைமுறையினர் பாரம்பரிய வாத்தியக்கருவிகள் தெரியாமலேயே வளர்கின்றனர் அதனை முறியடிக்கும் வகையிலே இவர்கள் காட்சிக்கூடம் அமைந்திருப்பார்கள். மாணவர்களின் பங்குகொள் ஆய்வுச்செயற்பாடாக இவ் அரங்க ஆற்றுகை அமைந்துள்ளது. மாணவர்கள் வெறுமனே பாடப்புத்தகத்தில் இருப்பவற்றை மட்டும் கற்றுக் கொள்ளக்கூடாது. மாறாக அவ்வாறான ஆய்வுச் செயற்பாடுகளையும் செயல்மையக் கல்வியையும் முன்னெடுப்பதன் மூலமே மாணவர்கள் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள முடியும்.

இவ் அரங்க விழாவிலே மக்களின் ஊடாட்டமானது செறிந்து காணப்படும். இரவு வேளைகளிலே கூத்துக்கள் ஆடப்பட்டன. கலைகளை ரசிக்கும் மனிதர்கள் அதிகமாகி விட்டனர். தங்கள் பாரம்பரியம் தங்கள் கலைகள் எனக்கூறி கலைகளில் ஈடுபடுவோர் அதிகமாகினர். ஓர் ஆற்றுகையின் மூலமே தொடர்பாடலையும் தொடர்புத்தன்மையினையும் ஏற்படுத்தமுடியும். ஆலயம் எனும்போது பலபாகங்களிலும் இருந்தும் மக்கள் வருகை தருவார்கள். அப்போது தெரிந்த சொந்தங்கள் சேரும், தெரியாதவர்களும் அங்கு பழக்கமாகிக் கொள்வார்கள். இது ஓர் ஆற்றுகையினை பார்வையிடும் போதே கிடைக்கின்றது.

நுண்கலைத்துறை மாணவர்களால் மழைப்பழம் வடமோடி, கண்டியரசன் தென்மோடி, அலங்காரரூபன் தென்மோடி, வீரகுமாரன் வடமோடிக்கூத்து, வசந்தன் கூத்து, மகிடிக்கூத்து ஆற்றுகை செய்யப்பட்டது. இங்கு சிறுவர்களால் கலிங்கத்துப்போர், மழைப்பழம் ஆகிய கூத்துக்கள், கரகம் ஆற்றுகை செய்யப்பட்டுள்ளது. இது பெரியவர்களையும், சிறியவர்களையும் மிகவும் கவர்ந்தது. சிறுவர்களினுடை ஆடல்கள், பாடல்கள் மிகவும் சிறப்பானதாக அமைந்திருந்தன. சிறுவர்களுக்கும் பாரம்பரிய அரங்கினள் நுழைவதற்கு களம் அமைத்துக் கொடுத்திருக்கின்றது நுண்கலைத்துறை.
பாரம்பரிய அரங்க விழாவிலே நுண்கலைத்துறை ஊர்க் கூத்தர்களுக்கு ஒவ்வொரு வருடமும் களமமைத்துக் கொடுக்கின்றது. அந்தவகையில்; பறைமேளக்கூத்து – களுதாவளைக் கலைஞர்கள், நகைச்சுவைக் கூத்து – பருத்திச்சேனைக் கலைஞர்கள், உலகநாச்சி வடமோடி – முனைக்காடு நாகசக்தி கலைக்கழகம், நொண்டிநாடகம் தென்மோடி – பண்டாரியாவெளி நாகர் கலைஞர்கள், நந்தியின் மகிமை - கண்ணகி முத்தமிழ் கலாமன்றம் கன்னங்குடா, புலிக்கூத்து – வந்தாறுமூலைக் கலைஞர்கள், அலங்காரரூபன் தென்மோடி - முனைக்காடு நாகசக்தி கலைக்கழகம், பூதத்தம்பி விலாசம் விலாசக்கூத்து – கரவெட்டி கலைக்கழக கலைஞர்கள், கண்டியரசன் ஒப்பாரி – வாதகல்மடு கலைஞர்கள், பவளக்கொடி வடமோடி - முனைக்காடு நாகசக்தி கலைக்கழகம், மங்கியூர் மகிமை தென்மோடி – பருத்திச்சேனை கூத்தர்கள், அல்லி அர்ச்சுனா வடமோடி – சொர்வாமுனை வேல்விழி கலைக்கழகம், அர்ச்சுனன் தவநிலை வடமோடி – நாவலடிக் கூத்தர்கள், வைகுந்தம் வடமோடி – கண்ணகி கலை கழகம் மகிழடித்தீவு.

அபிமன்னன் சண்டை வடமோடி - முனைக்காடு நாகசக்தி கலைக்கழகம் , மகாபாரதம் பகலிரவுப்போர் வடமோடி - கண்ணகி முத்தமிழ் கலாமன்றம் கன்னங்குடா, சராசந்தன்போர் வடமோடி - வேல்விழி கலாமன்றம் சொர்வாமுனை, நாவற்காடு, குருக்கள்மடக் கலைஞர்களின் குருக்கேத்திரன்போர் வடமோடிக்கூத்து, பறைச்சமர் இடம்பெற்றது. கிழவிவாயும் கிழமைலோனும் (நகைச்சுவைக்கூத்து) - வவுணதீவு விபுலானந்தா கலைக்கழகம், கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா கலைக்கலா மன்றத்தினரால் அரிச்சந்திரன் வடமோடிக்கூத்து, கன்னங்குடா கண்ணகி முத்தமிழ் மன்றத்தினரால் வானரயுத்தம் வடமோடிக்கூத்து இடம்பெற்றன.
அரங்க விழாவிலே சமகால கூத்தரங்க இயக்கப் பின்புலத்தில் செம்மையாக்கம், நவீனவாக்கம், மீளுருவாக்கம் என்ற எண்ணக்கருக்கள் பற்றிய கலந்துரையாடல்கள், வாத்தியக்கருவிகள் இணக்குதல் தொடர்பான கலந்துரையாடல், கொம்புமுறி விளையாட்டு தொடர்பான கலந்துரையாடல், மகிடிக்கூத்து பற்றி கலந்துரையாடல் போன்றவை இடம்பெற்றிருந்தன. இதில் மாணவர்கள் மட்டுமல்லாது கலைஞர்கள், உரையாடல் பற்றி அது சார்ந்தவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். இது சமகாலத் தேவைகளுக்கு பொருத்தமான ஒன்றாகவும் விளங்கியது.

அரங்க விழாவானது வெறுமனே மாணவர்களால் மட்டும் ஆற்றுகை செய்யப்படவில்லை. சமூகம் ஒன்றிணைந்ததாகவே காணப்பட்டது. களரிகட்டுவது தொடக்கம் களரி பிரிப்பது வரையிலான வேலைகளினுள் சமூகத்தின் பங்குபற்றலானது உட்புகுந்துள்ளது. களரி கட்டும் போது முதியவர்கள் அவர்களுடன் சேர்ந்து தென்னை மட்டைகளை இழைத்துத் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுடன் இருந்து கூத்தும் பார்த்தார்கள். பெரியவர்களுடன் இருந்து வேலை செய்தமை ஓர் புது அனுபவத்தினை அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கும். இவ்வாறான செயற்பாடுகள் மாணவர்களை மட்டுமன்றி சமூகத்தினரையும் ஆழமாகச் சிந்திக்க வைக்கின்ற ஒன்றாகக் காணப்படுகின்றது.
மாணவர்கள் அனைவரும் தங்கள் தங்கள் பொறுப்புக்களை சிறந்தமுறையில் ஒற்றுமையுடன் சேர்ந்து செய்தனர். இவ்வாறான முறைகள் மாணவர்களுக்கு தங்கள் திறமைகளையும் சிந்தனைகளையும் வளர்க்க ஓர் களமாக அமையும். தோரணம் அமைக்கும் போது எவ்வாறான தோரணம், அதற்கான வடிவம், அலங்கரிக்க எவ்வாறான வர்ணங்களைத்தெரிவு செய்தல் வேண்டும் என்பதனை மாணவர்கள் சரியான முறையில் கற்றுக் கொள்ள வழியேற்பட்டது.
2017லில் 'வாழும்போதே வாழ்த்துவோம்' கலைஞர் கௌரவம் இடம்பெற்றது. அந்தவகையில் அண்ணாவிமார்களும் கூத்துப்புலவர்களும் கௌரவம் பெற்றனர். அண்ணாவியார் நோஞ்சுப்போடி. சண்முகநாதன் பருத்திச்சேனை கன்னங்குடா. அண்ணாவியார் மாணிக்கப்போடி . பசுபதி மூண்டாளமடு கன்னங்குடா, கூத்து எழுதும் புலவர் கணபதிப்பிள்ளை. திருநாவுக்கரசு கண்ணிநகர் பாவற்கொடிச்சேனை போன்றோர் கௌரவம் பெற்றனர்.

ஒன்றுகூடி உள ஆற்றுப்படுத்தலை பெறுவதற்கு பாரம்பரிய அரங்க ஆற்றுகைகளும் அதன் வெளியின் இயல்புத்தன்மையும் பெரும் துணைபுரிகின்றன. இங்கு இடம்பெற்ற நிகழ்வுகள் அனைத்தும் கலைரசனையுடன் மக்கள் தங்கள் பாரம்பரியங்களை மேம்படுத்தும் நோக்குடன் அமைந்திருந்தது. இப்பாரம்பரிய அரங்க விழாவில் மாணவர்கள் தங்கள் ஊக்கங்களையும் ஈடுபாடுகளையும் சிறப்பாக வழங்கியிருந்தனர். கற்றல் செயற்பாடுகளுக்கு அப்பால் மாணவர்களை ஆளுமையுள்ளவர்களாக மாற்றுவதற்கு இது ஓர் களமாக அமைகின்றது.
-மகிழையாள் -












