இம்முறை காலபோக விவசாயச்செய்கையில் வாகனேரித்திட்ட விவசாயிகள் சிறந்த அறுவடையை பெற்றுள்ளனர். இதனைக்கொண்டாடும் முகமாகவும் கடவுளுக்கும் நீர்ப்பாசன திணைக்களத்துக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாகவும் அறுவடைப்பொங்கல் விழா ஒன்றினை கடந்த 04ம் திகதி சனிக்கிழமை வாகனேரி தவணைக்கண்டத்தில் விமர்சையாக ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக நீர்ப்பாசன நீர்வளங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தார். மேலும் இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் அலிசாகிர் மௌலானா, நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம் எந்திரி.சீ.மோகனராஜா, அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் நாயகம் எஸ்.அமலநாதன், அரசாங்க அதிபர் மா.உதயகுமார்,
முன்னாள் பிரதியமைச்சர் வி.முரளிதரன்,,முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் கி.துரைராஜசிங்கம், மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர் எந்திரி.எஸ்.எம்.வி.எம்.அஸார், பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் எந்திரி.சி.ஜெயன் பார்த்தசாரதி ஆகியோர் உட்பட பெருமளவிலான விவசாயிகளும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் அவர்கள் இவ்வாறானதொரு நிகழ்வு ஏற்பாடு செய்ததையிட்டு விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்ததுடன் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். மண்ணகழ்வினை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
மேலும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான சந்தியார் வீதியையும் எருக்கலம்பற்று பாலத்தினையும் புனரமைக்க நிதி ஒதுக்குவதாகவும் மதிப்பீட்டறிக்கையை உடன் தரும்படியும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இறுதியாக சிறந்த நீர் முகாமைத்துவத்தினை பேணி விளைச்சலுக்கு முக்கிய பங்காற்றிய நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.



































