
மட்டக்களப்பின் பழமைவாய்ந்த கிராமமான தாழங்குடாவில், ஆதி காலத்தில் உலகநாச்சி அரசியார் தனது போர் படைச் சேனைகளை நிறுத்தி வைத்த பதியான சேனைத்தெருவில் கோவில் கொண்டு அருள்பாலிக்கும் அன்னை ஸ்ரீ வீரமா காளியம்பாள் ஆலய வருடாந்த சடங்கு நிகழ்வில் தீ மிதிப்பு வைபவம் 25.08.2018 சனிக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது.
மாலை வேளையில் ஆரம்பமான பூஜை நிகழ்வுகளை அடுத்து தீ மிதிக்கும் நிகழ்வு அடியார்களால் பக்தி மயத்துடன் விரதம் இருந்து அனுட்டிக்கப்பட்டது. அரோகரா எனும் கோசம் முழங்க ஓம் சக்தி எனும் நாம உச்சாடனத்துடன் நூற்றுக்கணக்கான அடியார்கள் தீ மிதிக்கும் நிகழ்வில் பங்குபற்றினர்.
இப் பூஜைக்கான கிரிகைகள் ந.துவாகரன், மா.நமசிவாயம், ஆகிய குருக்கள்மாரால் நடாத்தப்பட்டதுடன், இதில் பக்தி பரவசத்தில் ஆடுபவர்கள், மற்றும் உடுக்கை முழங்க காவியம் பாடி அவர்களை வழிப்படுத்துபவர்கள் என கிராமிய முறையிலான சடங்கு நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டு சிறப்பாகக நடைபெற்றதைக் காணலாம்.
































































